Ajith Kumar : புகழ் போதையில் அதை பண்ணேன்..ரொம்ப வெட்கப்படுறேன்...மனம் திறந்த அஜித்
நட்சத்திரமாக இருந்துகொண்டே எளிமையான வாழ்க்கையை பின்பற்றுவது குறித்த சவால்களை நடிகர் அஜித் குமார் பேசியுள்ளது ரசிகர்களிடம் கவனமீர்த்துள்ளது

தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா ஊடகத்திற்கு நடிகர் அஜித் கொடுத்துள்ள நேர்காணல் பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது. இந்த நேர்காணலில் அஜித் தன்னுடைய சினிமா அனுபவம் , கார் ரேஸிங் குறித்தும் மற்றும் பல சமூக அரசியல் விஷயங்களை பற்றி பேசியுள்ளார். பிரபலமாக இருந்து தனது வேலைகளை தானே செய்துகொள்வது குறித்து அஜித் பேசியது ரசிகர்களை கவர்ந்துள்ளது
ஏழு வயதில் சமையல் கற்றுக்கொண்டேன்
ஒரு பிரலமாக இருந்து அதே நேரத்தில் தனது வேலைகளை தானே செய்துகொண்டும் எப்படி இயல்பாக உங்களால் இருக்க முடிகிறது என்கிற கேள்விக்கு அஜித் இப்படி கூறினார். " நான் மட்டுமில்லை எல்லாரும் அவரவர்களின் வேலையை அவர்களே செய்கிறார்கள். நான் ஒரு மிடில் கிளாஸ் வீட்டில் இருந்து வருகிறவன். என் பெற்றோர்கள் அற்புதமான மனிதர்கள். அவர்கள் அவர்களின் காலத்திற்கு முந்தி சிந்திக்கத் தெரிந்தவர்கள். எங்கள் வீட்டில் நாங்கள் எல்லாரும் அவரவர் வேலைகளை செய்துதான் பழகினோம் . நான் 7 வயது இருக்கும்போதே எனக்கு சமைக்கக் கற்றுக்கொடுத்தார்கள்.
புகழ் என்பது ஒரு போதை
ஆனால் பிரபலமானப்பின் போது உங்களுக்கு நிறைய பொறுப்புகள் வருகின்றன. உங்களுடைய வேலைகளை செய்வதற்கு உங்களைச் சுற்றி சிலர் இருப்பார்கள். ஆனால் ஒருகட்டத்திற்கு மேல் எல்லாரும் உங்களுக்காக வேலை செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க துவங்குவீர்கள். எனக்கு அப்படி நடந்திருக்கிறது. அதற்காக நான் ரொம்ப வெட்கப்படுகிறேன். சில நேரங்களில் புகழ் உங்களை கெடுத்துவிடும். அதனால் தான் நான் அதிலிருந்து விலகி இருக்கிறேன். அதனால் தான் அந்த புகழை எல்லாம்விட்டு துபாயில் இருக்கிறேன். என்னுடைய வேலைகளை நானே செய்துகொள்வதை நான் ரொம்ப விரும்புகிறேன். எனக்கு சின்ன வயதில் சொல்லிக்கொடுக்கப்பட்ட எல்லா விஷயங்களும் இப்போது எனக்கு பயன்படுகிறது. ஒரு 20 வருடத்திற்கு முன் என்னை நீங்கள் பார்த்திருந்தால் என்னை வெறுத்திருப்பீர்கள். உங்களைச் சுற்றி நிறைய பேர் இருக்கும் போது நிறைய பிரச்சனைகள் உருவாகின்றன. அதற்கான நான் நிறைய நேரத்தை வீணடிக்கிறேன் என்று எனக்கு தோன்றியது அதனால் முடிந்த அளவிற்கு யாரையும் சாராமல் சுதந்திரமாக இருக்க நான் பழகிக்கொள்கிறேன். என் வாழ்க்கையில் நான் புகழை விட்டு விலகி வந்து ரேஸிங் களத்திற்கு வந்ததை ரொம்ப பெருமையாக கருதுகிறேன். புகழ் ஒரு போதை என்பதை என்னுடைய கடந்த கால அனுபவவங்களை வைத்து நான் அறிந்திருக்கிறேன். அதனால் முடிந்த அளவிற்கு அது என்னை பாதிக்காத விதத்தில் அதிலிருந்து விலகி இருக்கிறேன். " என அஜித் கூறியுள்ளார்





















