Venkat Prabhu | மாநாடு ரிலீசுக்கு முன் புதிய படத்தில் கமிட் ஆன வெங்கட் பிரபு!
பிரபல இயக்குநரும் நடிகருமான வெங்கட் பிரபு மாநாடு படத்தை தொடர்ந்து தான் இயக்கவுள்ள அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட் ஒன்றை தற்போது தனது ட்விட்டர் மூலம் வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள படம் தான் "மாநாடு". படத்திற்கான எதிர்பார்ப்பு சிம்புவின் ரகிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. சிம்புவின் நடிப்பில் இறுதியாக வெளியான படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிக்கும் மாநாடு படம் நிச்சயம் சிம்புவிற்கு கைகொடுக்கும் என நம்பப்படுகிறது. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் சிம்புவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும் எஸ்.ஜே.சூர்யா, வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி உள்ளிட்ட பல நடிகர்கள் இணைந்துள்ளனர். படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார், சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரிக்கிறார். படத்தில் "அப்துல் மாலிக்" என்ற கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படம் முழுக்க முழுக்க அரசியல் களம் கொண்டு பயணிக்க உள்ளது பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
A Venkat Prabhu ‘QUICKIE’ #VP10 @Rockfortent #BlackTicketCompany
— venkat prabhu (@vp_offl) May 28, 2021
படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் மும்முரமாக நடைப்பெற்று வருகிறது. "மாநாடு" படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், படத்தின் முழு பணிகளும் விரைவில் முடிவடையும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மாநாடு படம் வெளியாகும் முன்பே தனது அடுத்த பட அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார் வெங்கட் பிரபு. பிரபல தயாரிப்பாளர் டி.முருகானந்தனின் ராக்போர்ட் என்டர்டையின்மன்ட் நிறுவனத்துடன் இணைகிறார். இது அவர் இயக்கும் 10வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல இசைக்குடும்பத்தில் பிறந்த வெங்கட் பிரபு 1990ம் ஆண்டு பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி படத்தின் மூலம் ஒரு பாடகராக அறிமுகமானார். சிறுவயதிலே பல படங்களில் அவர் பல சிறந்த பாடல்களை பாடியுள்ளார். 2002ம் ஆண்டு பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தல அஜித் நடித்த ஜி, தளபதி விஜயின் சிவகாசி போன்ற படங்களில் நடித்துள்ள வெங்கட் பிரபு முதல் முதலில் இயக்குனராக ஒரு நடிகர் பட்டாளத்தையே திரையுலகிற்கு அறிமுகம் செய்த படம் தான் 2007ம் ஆண்டு வெளியான சென்னை 600028.
அந்த படத்திற்காக அவர் பல விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. கோவா, தல அஜித்தின் மங்காத்தா, சூர்யாவின் மாசு, கார்த்தியின் பிரியாணி உள்ளிட்ட ஜனரஞ்சகமான பல படங்களை அவர் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சிம்புவின் மாநாடு உள்பட 9 படங்களை இயக்கியுள்ள வெங்கட் பிரபு தற்போது தனது 10வது பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிரபல ராக்போர்ட் நிறுவனம் சார்பில் இந்த படம் உருவாக உள்ளது. இந்த படம் குறித்த மேலும் பல தகவகல்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.