60 years of Nenjam Marapadhillai: கொஞ்சமும் நெஞ்சம் மறக்காத 'நெஞ்சம் மறப்பதில்லை'... இன்றுடன் 60 ஆண்டுகளை நிறைவு
பூர்வ ஜென்ம கற்பனை கதையை திரைக்கதையாக்கி அதில் இணையாத காதலை இந்த ஜென்மத்தில் இணைத்து கடலையும் காதலர்களையும் இணைந்த நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் இன்றுடன் 60 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
![60 years of Nenjam Marapadhillai: கொஞ்சமும் நெஞ்சம் மறக்காத 'நெஞ்சம் மறப்பதில்லை'... இன்றுடன் 60 ஆண்டுகளை நிறைவு 60 years of Nenjam Marapadhillai special story 60 years of Nenjam Marapadhillai: கொஞ்சமும் நெஞ்சம் மறக்காத 'நெஞ்சம் மறப்பதில்லை'... இன்றுடன் 60 ஆண்டுகளை நிறைவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/02/cc665edde2be3fbbec333f9f222d63741690915629881224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அடுத்த ஜென்மம் என ஒன்று இருக்கா? அப்படி இருந்தா அந்த ஜென்மத்திலேயேயும் நீயும் நானும் ஒன்று சேர வேண்டும் என்ற இந்த டைலாக் எத்தனை பேர் சொல்லி கேள்விப்பட்டு இருப்போம். அப்படி ஒரு பூர்வ ஜென்ம கற்பனை கதையை திரைக்கதையோடு சேர்த்து கோர்த்து மாலையாக்கிய ஸ்ரீதரின் படம் தான் 'நெஞ்சம் மறப்பதில்லை'. இப்படம் வெளியாகி இன்றுடன் 60 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
கல்யாண் குமார், எம்.என் நம்பியார், நாகேஷ், தேவிகா, மனோரமா என மிகவும் திறமையான நடிகர்களின் சங்கமம் என்றே சொல்ல வேண்டும். நண்பனின் கிராமத்துக்கு வரும் ஹீரோ அங்கே பார்க்கும் இடங்களையெல்லாம் ஏற்கனவே பார்த்து பழகின இடங்கள் போன்ற உணர்வு ஏற்பட ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் பங்களா ஒன்றுக்கு சென்று அங்கே சுவரில் ஒரு ஆணின் ஓவியத்தை பார்த்ததும் அந்த நிமிடம் முதல் ஹீரோவுக்கு முன் ஜென்மத்து ஞாபகங்கள் நினைவில் வருகின்றன. அந்த ஹீரோவாக கல்யாண் குமார்.
ஜமீன்தாரின் மகன் ஒரு ஜமீனில் வேலை செய்யும் ஒரு சாதாரண பணியாள் மகளான தேவிகாவை காதலிப்பதும் அவர்களை இந்த ஜென்மம் அல்ல எந்த ஜென்மத்திலும் சேர விடமாட்டேன் என சபதமிடும் ஜமீன்தாராக எம். என். நம்பியார். நாகேஷ் - மனோரமா ஒருவரை ஒருவர் விரும்புகையில் தேவிகாவை நாகேஷுக்கு திருமணம் செய்து வைக்க ஜமீன் முயற்சி செய்யும் போது அவளை தப்பிக்க வைக்கிறார் கல்யாண் குமார். தலைக்கேறிய கோபத்தால் தேவிகாவை சுட்டு வீழ்த்துகிறார் ஜமீன். அந்த பாழடைந்த பங்களாவில் ஒரு வயதான ஒரு கிழவன் இருக்க நாயகன் சொல்வதை எல்லாம் ஆமோதிக்கிறார். நீங்கள் யார்? ஜமீன் நிலை என்ன ஆனது என நாயகன் கேட்டதும் பலத்த சிரிப்புடன் 'நான் தான் அந்த ஜமீன்' என சொல்கிறார். அந்த 109 வயதான கிழவன். நாயகனுக்கு மட்டும் அல்ல பார்வையாளர்களை திடுக்கிட வைத்த அந்த நொடி அனைவரையும் வேர்த்து விறுவிறுக்க வைத்தது.
இந்த பூர்வஜென்ம கதையெல்லாம் நாயகனுக்கு நினைவில் வர நண்பனின் தங்கை தான் தேவிகா என்பதை தெரிந்து கொண்ட காதலன், அவளின் சித்த பிரம்மையை குணமாக்குகிறார். அந்த கிழவன் இதை தெரிந்து கொண்டு தேவிகாவை கொள்ள துப்பாக்கியை எடுக்கிறார். நாயகன் நாயகியை எப்படியோ கிழவனிடம் இருந்து காப்பாற்றுகிறார். ஆனால் கிழவன் அருகில் இருந்த புதைகுழியில் விழுந்து மரணமடைகிறார். பூர்வஜென்மத்தில் இணையாத காதல் ஜோடிகள் இந்த ஜென்மத்தில் இணைகிறார்கள். இது தான் படத்தின் கதை.
இதை பார்த்ததும் நிஜமா அல்லது கதையா என்ற எண்ணத்தை விதைத்தாலும் நேர்த்தியாக அந்த கதையை சொல்லி ரசிகர்களை உறையவைத்த பெருமை ஸ்ரீதரையே சேரும். காட்சிகளுக்கு மேலும் ஜீவனை கொடுத்து இருந்தார் ஒளிப்பதிவாளர் வின்சென்ட். விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் இடையில் இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொரு முறை கேட்கும் போதும் நெஞ்சங்களை அள்ளிக்கொண்டு போகும்.
கண்ணதாசன் வரிகளுக்கு பி.பி. ஸ்ரீனிவாஸ், சுசீலாவின் காந்த குரலில் ஒலித்த 'நெஞ்சம் மறப்பதில்லை' பாடலுக்கு மெட்டமைக்க 6 மாத கால அவகாசம் தேவை பட்டுள்ளது. அந்த கடின உழைப்பு சற்றும் வீணாகாமல் இன்றும் சுண்டி இழுக்கும் பாடலாக அமைந்துள்ளது தான் அதன் தனி சிறப்பு.
மாபெரும் வெற்றி படமாக அமைந்த நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் 60 ஆண்டுகளை கடந்த பின்பும் மறக்க வாய்ப்பேயில்லை என்ற கர்வத்தோடு நிமிர்ந்து நிற்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)