மேலும் அறிய
Advertisement
திருவாரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 32 உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு தேர்தல் வாக்குப்பதிவு
கொரோனா தொற்று காரணமாக வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு கையுறை, முகக்கவசம் வழங்கப்பட்டு அதன் பின்னரே வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த ஆறாம் தேதி மற்றும் இன்று என இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்பு பதவிகளில் காலியாக உள்ள 32 பதவிகளுக்கு இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் காலை முதலே ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இன்று மாலை 6 மணி வரை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கொரோனா தொற்று காரணமாக வாக்களிக்க வரும் பொதுமக்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு கையுறை, முகக்கவசம் வழங்கப்பட்டு அதன் பின்னரே வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். வாக்குச் சாவடியில் உள்ள அதிகாரிகளும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை எரவாஞ்சேரி, பள்ளிவாரமங்கலம், மூவாநல்லூர், குளிக்கரை உள்ளிட்ட ஊராட்சிகளில் காலியாக உள்ள ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கும் மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 11 ஆவது வார்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கும் என மொத்தமாக மாவட்டம் முழுவதும் காலியாக உள்ள 32 உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கு இந்த தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் 32 உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான தேர்தலுக்காக 136 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் 29,895 ஆண் வாக்காளர்களும், 30,967 பெண் வாக்காளர்களும், 5 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தமாக 60,867 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 136 வாக்குச்சாவடிகளுக்கு 669 அரசு ஊழியர்கள் வாக்குப்பதிவு அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். 39 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அந்த பகுதிகளில் வீடியோ பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வாக்குச்சாவடி மையங்களில் காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்குள்ளானவர்கள் மட்டும் வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை என்பது வருகின்ற 12ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் வருவாய்த்துறை உள்ளிட்ட அரசுத் துறையின் உயர் அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் அலுவலர்கள் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தேர்தல் முறைகேடுகளை தடுக்கும் விதமாக திடீர் ஆய்வுகள் செய்தும், சோதனையில் ஈடுபட்டும் வருகின்றனர்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion