(Source: ECI/ABP News/ABP Majha)
Telangana Election 2023: தெறிக்கும் தெலங்கானா தேர்தல்: மூச்சு முட்ட வைக்கும் முக்கியப் பிரச்சினைகள்? தப்புமா கேசிஆர் ஆட்சி?
Telangana Assembly Election 2023: தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய, முக்கிய பிரச்னைகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
Telangana Assembly Election 2023: தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் நவம்பர் 30ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தில் நிலவும் முக்கிய பிரச்னைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
தெலங்கானா சட்டமன்ற தேர்தல்:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக, அடுத்தடுத்து நடைபெற உள்ள 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக தென்மாநிலத்தில் இடம்பெற்றுள்ள தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் அதிக கவனம் ஈர்த்துள்ளது. நவம்பர் 30ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான பிஆர்எஸ் மற்றும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அதேநேரம், பாஜக மற்றும் அசாதுதின் ஓவைசியின் AIMIM ஆகிய கட்சிகள் இந்த தேர்தலில் பெரும் தாகக்த்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தேர்தல் முடிவுகளை மாற்றும் வகையில் மாநிலத்தில் நிலவும் முக்கிய பிரச்னைகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
-
ஆட்சியின் மீதான அதிருப்தி:
தெலங்கானா மாநிலம் உருவானது முதலே பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. ஆனால், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் நிறைவேற்றவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆட்சியின் மீது பொதுவான ஒரு அதிருப்தி நிலவுகிறது.
-
ஊழல் குற்றச்சாட்டுகள்:
நாட்டிலேயே மிகவும் ஊழலில் மலிந்த ஆட்சி சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு தான் என, காங்கிரஸ் மற்றும் பாஜக கடுமையாக சாடி வருகின்றன. டெல்லி மதுபான ஊழல் வழக்கில் பிஆர் எஸ் கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசுப் பணிக்கான தேர்விலும் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான காலேஸ்வரம் பாசன திட்டத்திலும் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றன.
-
நலத்திட்ட அறிவிப்புகள்:
முன் எப்போதும் இல்லாத அளவில் அரசியல் கட்சிகள் உதவித்தொகை தொடர்பான நலத்திட்டங்களை போட்டி போட்டுக்கொண்டு அறிவித்து வருகின்றன. இதில், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வது, ஓய்வூதியத் தொகையை உயர்த்துவது, பின்தங்கிய சமூகத்தினருக்கான உதவித்தொகை, வேலையில்லா இளைஞர்களுக்கான உதவித்தொகை, காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் மாநில அரசாங்கத்தில் வேலை தொடர்பான அறிவிப்புகளும் உள்ளன. இது தேர்தலில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
மாநிலத்தின் நிதி நிலை:
மாநிலத்தின் அதிகரித்து வரும் கடன்கள் மற்றும் பல்வேறு உதவித் திட்டங்களுக்கு வழங்கப்படும் நிதியை முறையாக கையாள்வது போன்றவை தேர்தலில் வெற்றி பெறும் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும். விவசாயக் கடன் நிவாரணம், விவசாயிகள் மற்றும் பட்டியலின மக்களுக்கான திட்டம் என அனைத்திற்கும் பெரும் நிதி ஒதுக்கப்பட வேண்டியுள்ளது.
-
உட்கட்சி பூசல்:
பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத, முக்கிய பிரமுகர்களின் எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டிஉள்ளது. முக்கியமான சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பையும், வாக்குகளைப் பெறும் திறனையும் இது பாதிக்கும் என்ற கவலை உள்ளது. சில தலைவர்கள் தங்கள் கட்சியினர் சொல்வதை பகிரங்கமாக புறக்கணிப்பதையும் காண முடிகிறது.