நோட்டா கட்சியா? தமிழகத்தில் பாஜக நுழைய முடியாதா? - கருத்துக்கணிப்பால் காலர் தூக்கிவிடும் அண்ணாமலை
தமிழகத்தில் பாஜகவால் நுழைய முடியாது என்று சொன்னீர்கள். இது முதல் படி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில் ஏபிபி சி வோட்டர் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தமிழகத்தில் திமுக உள்ளடக்கிய இந்தியா கூட்டணி 37 முதல் 39 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்பு என கணித்துள்ளது. அதேபோல் பாஜக 0 முதல் ஒரு தொகுதியையும் அதிமுக 0 முதல் 1 தொகுதியையும் கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளது.
இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக்கணிப்பின் படி, இந்தியா கூட்டணி 26-30 இடங்களை பிடிக்க வாய்ப்பு எனவும் அதிமுக கூட்டணி 6-8 இடங்களை பிடிக்க வாய்ப்பு எனவும் பாஜக கூட்டணி 1-3 இடங்களை பிடிக்க வாய்ப்பு எனவும் தெரிவித்துள்ளது.
சிஎன்.என் நியூஸ் 18 வெளியிட்ட கருத்துக்கணிப்பின்படி, இந்தியா கூட்டணி 36-39 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 2 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி 1-3 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 46.3 சதவிகித வாக்குகளை இந்தியா கூட்டணி பெறும் என்றும் 21 சதவிகித வாக்குகளை அதிமுக கூட்டணி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 18.9 சதவிகித வாக்குகள் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுக்கு 13.8 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.,
#WATCH | On Lok Sabha exit polls, Tamil Nadu BJP President K Annamalai says, "For a state like Tamil Nadu, this is just a beginning, this is the step in the first direction. A state where you said BJP can't enter, a state till yesterday AIADMK and DMK were saying we are NOTA… pic.twitter.com/viXnvabJpi
— ANI (@ANI) June 1, 2024
இந்நிலையில், மக்களவை தேர்தல் கருத்துக்கணிப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், "தமிழகம் போன்ற மாநிலத்திற்கு இது ஒரு ஆரம்பம். இது முதல் படி. பாஜக நுழைய முடியாது என்று நீங்கள் கூறிய மாநிலம் தமிழ்நாடு. நேற்று வரை அதிமுகவும், திமுகவும் நாங்கள் நோட்டா கட்சி என்று சொல்லிக் கொண்டிருந்தனர். இன்று 20%க்கு மேல் வாக்குகள் இருப்பதை நிரூபித்து விட்டோம். ஜூன் 4ம் தேதி நாங்கள் தமிழகத்தின் பல்வேறு மூலைகளில் இருந்தும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பாஜக சார்பில் தமிழக எம்பிக்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப உள்ளோம். இதன் மூலம் பிரதமர் மோடியுடன் நிற்போம் என்று தமிழக மக்கள் தெரிவித்துள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.