PM Salem Visit: பத்து ஆண்டுக்கு பின்னர் பிரதமர் சேலம் வருகை... பாஜகவினர் உற்சாகம்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் பிரதமர் பங்கேற்கும் முதல் பிரச்சார பொதுக்கூட்டம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று சேலம் வருகிறார். சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் பொது கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் சேலம், நாமக்கல் மற்றும் கரூர் நாடாளுமன்ற தொகுதி மக்களிடையே பிரதமர் உரையாற்ற உள்ளார்.
10 ஆண்டுகளுக்குப் பின் சேலத்தில் மோடி:
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது சேலம் இரும்பாலை பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கடந்து கொண்டு பேசினார். அதன் பின்னர் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பிரதமர் மோடி சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளதால் பாஜகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முதல் பிரச்சார பொதுக்கூட்டம்:
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் பிரதமர் பங்கேற்கும் முதல் பிரச்சார பொதுக்கூட்டம் இது ஆகும். எனவே, பிரதமர் பங்கேற்று உரையாற்றும் சேலம் பொதுக்கூட்டம் இந்திய அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கூட்டத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்பு:
பாஜக சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாஜக கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சியினர் சேலம் வருகை தந்து வருகின்றனர். குறிப்பாக பாஜக பொதுக்கூட்டத்தில் முதன் முறையாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் முன்னாள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்க உள்ளனர். மேலும் பாஜக பிரமுகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் சேலம் வந்துள்ளனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்று நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் சேலம் வருகை:
பாரதிய ஜனதா கட்சி சார்பில் சேலத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் 12:50 மணியளவில் சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி வருகிறார். பின்னர் பிற்பகல் 1 மணி முதல் பிற்பகல் 1:50 மணி வரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். உரை முடிந்ததும் பிற்பகல் 1:55 மணிக்கு பொதுக்கூட்டம் மைதானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு சேலம் விமான நிலையம் சென்றடைகிறார். பின்னர் சேலம் விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெறும் சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி மற்றும் சேலம் விமான நிலைய ஆகிய பகுதிகள் ரெட் ஜோனாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பகுதியும் முமுமையாக சிறப்பு பாதுகாப்பு படை மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படுகிறது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு நேற்று மற்றும் இன்று சேலம் மாவட்டம் முழுவதும் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வெளி வாகனம் பறக்கவும் தடை விதித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் பொதுக் கூட்டத்திற்கு வரும் அரசியல் கட்சி தலைவர்களின் வாகனங்களை சோதனை இடவும் தேர்தல் பறக்கும் படையினர் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் வருகையை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு படை மற்றும் தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.