MP Paarivendhar: மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றால் 1,500 குடும்பங்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை- பாரிவேந்தர் உறுதி
MP Paarivendhar: தமிழர்கள்தான் இன்று உலகம் முழுவதும் வளர்ந்து வருகிறார்கள் எனவும் தேசியத்தை நோக்கியும் பொருளாதாரத்தை நோக்கியும் செல்ல வேண்டும் எனவும் ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தர் கேட்டுக்கொண்டார்
தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஊழல்வாதிகள் என, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தர் குற்றஞ்சாட்டினார்.
ஐ.ஜே.கே. வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர்:
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செங்குணம் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். முன்னதாக வழிநெடுகிலும் மக்கள் பூக்கள் தூவியும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து பேசிய டாக்டர் பாரிவேந்தர், தி.மு.க. என்பது ஊழல் கட்சி எனவும், ஊழல்வாதிகளையும் அவர்களின் குடும்பத்தையும் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகத்தான் அரசியலுக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
1500 குடும்பங்களுக்கு உயர்தர சிகிச்சை:
மேலும், தன்னை M.P.யாகத் தேர்ந்தெடுத்தால் ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என்றும் டாக்டர் பாரிவேந்தர் உறுதியளித்தார். பரப்புரையில், தேசிய ஜனநாய கூட்டணிக் கட்சியினர், ஐ.ஜே.கே. நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதனைதொடர்ந்து கல்பாடி கிராமத்தில் டாக்டர் பாரிவேந்தர் பிரசாரம் மேற்கொண்டபோது, ஆளுயர மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பளித்தனர். அப்போது பேசிய டாக்டர் பாரிவேந்தர், தான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய பணிகள், அமைச்சர்களை சந்தித்த நிகழ்வுகள் அனைத்தும் புத்தகமாக வழங்கி உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், அரியலூர், பெரம்பலூர், துறையூர், நாமக்கல் நகரங்களை இணைக்கும் ரயில்வே திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் டாக்டர் பாரிவேந்தர் வாக்குறுதி அளித்தார்.
தொடர்ந்து சிறுவாச்சூர் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட பெரம்பலூர் தொகுதி ஐ.ஜே.கே வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தர், நீண்ட நாள் கோரிக்கையான சிறுவாச்சூர் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டதாகவும், மக்களுக்கான எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்துவிட்டு தற்போது மக்களைச் சந்திக்க வந்துள்ளதாகவும் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி நேர்மையான ஆட்சி கொடுத்துள்ளதாக கூறிய டாக்டர் பாரிவேந்தர், தயவு செய்து ஊழல்வாதிகளை தேர்ந்தெடுக்காமல் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி பகுதியில் பரப்புரை மேற்கொண்ட டாக்டர் பாரிவேந்தர், பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரி நீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
பஞ்சப்பட்டி பகுதியில் பிரசாரம் செய்த பெரம்பலூர் தொகுதி ஐ.ஜே.கே. வேட்பாளர் டாக்டர் பாரிவேந்தரை தொண்டர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் அவர் பேசினார். அப்போது, குடும்ப ஆட்சி அகற்ற வேண்டும் எனவும், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தான் எம்.பி ஆனால் பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரி நீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து வேங்காம்பட்டி கிராமத்தில் டாக்டர் பாரிவேந்தர் ஆதரவு திரட்டினார். அப்போது எம்.பி தொகுதி நிதி 17 கோடி ரூபாயை பெரம்பலூர் தொகுதிக்கு, தேவையான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு முழுமையாக செலவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். வாக்குறுதியின்படி ஆயிரத்து 200 பேரை பட்டதாரிகளாக மாற்றியுள்ளதாக அவர் கூறினார். மோடியின் சிறப்பான ஆட்சியால் இந்தியா, முதல் பணக்கார நாடாக மாறும் எனவும் அவர் தெரிவித்தார்.
”1200 பட்டதாரிகள்”
நல்லவர்களை MPயாக அனுப்புங்கள், ஊழல் வாதிகளை தேர்ந்தெடுக்கக்கூடாது என அவர் கேட்டுக் கொண்டார். உங்கள் தேவைகளை நிறைவேற்ற நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். தொடர்ந்து புனவாசிப்பட்டி பகுதியில் ஆதரவு திரட்டிய டாக்டர் பாரிவேந்தருக்கு திரளான பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது 5 ஆண்டுகளில், தான் செய்த பணிகளை புத்தகமாக வழங்கி உள்ளதாக குறிப்பிட்டார். உங்களின் தேவைகள் அனைத்தையும் கேட்டறிந்து முழுமையாக நிறைவேற்றி உள்ளதாக அவர் கூறினார். புண்ணியம், கருணை, உதவி என்ற நோக்கத்திற்காக ஆயிரத்து 200 மாணவர்களை பட்டதாரியாக்கியதாக பெருமிதம் தெரிவித்தார்.
மோடிக்கு எதிராக பிரதமர் பதவிக்கு போட்டியிட இந்தியா கூட்டணியில் யாருமே இல்லை என குறிப்பிட்டார். இந்தியா முழுவதும் ஊழல் செய்த கட்சி என்றால் திமுகவை தான் அழைக்கிறார்கள் என விமர்சித்தார். பேருந்து வசதி, கால்நடை மருத்துவமனை, பள்ளி கட்டடம் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என அவர் உறுதி அளித்தார்.
லாலாப்பேட்டை பகுதியில் பிரசாரம் செய்த டாக்டர் பாரிவேந்தர், தன்னை வெற்றிபெறச் செய்தால் ஆயிரத்து 200 மாணவர்களுக்கான இலவச உயர்கல்வி திட்டம் தொடரும் என்றும், ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு இலவச உயர் சிகிச்சை வழங்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார். நாடு வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காக மோடி இரவு பகலாக உழைப்பதாக அவர் குறிப்பிட்டார். மோடி நமக்கு கிடைத்திருப்பதற்கு, மிகப்பெரிய புண்ணியம் செய்திருப்பதாகவும் டாக்டர் பாரிவேந்தர் புகழாரம் சூட்டினார்.
தமிழ்நாட்டை தனித்தீவு போலவும், தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் சம்பந்தம் இல்லாததுபோல் ஆட்சியில் இருப்பவர்கள் செயல்பட்டு வருவதாக ஐ.ஜே.கே. தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் அஸ்வத்தாமனை ஆதரித்து இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து விருதுவிளங்கினான் கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்பொழுது பேசிய அவர், பிரதமர் மோடி இந்தியாவின் புகழைப் பரப்ப வேண்டும் என்று பாடுபட்டு வருவதாகவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதுடன், பொருளாதாரத்தில் இந்தியாவை மேலும் முன்னேற்ற முயற்சித்து வருவதாகவும் கூறினார். மேலும், தமிழ்நாடு தனித்தீவு போலவும், தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் சம்பந்தம் இல்லை என்றும், பாரதம் என்ற ஒன்றே இல்லாதது போலவும் ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
”பிரதமர் மோடியால் மட்டுமே முடியும்”
அதனை தொடர்ந்து, சு.வாழாவெட்டி கிராமத்தில் பேசிய ரவி பச்சமுத்து, இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் எனவும், ஊழலுக்கு எதிராக ஊழல் கட்சிகள் மீது பிரதமர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார். இங்கு தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பலர், தமிழ் என்று சொல்கிறார்களே தவிர, பிரதமர் மோடியை போலவும் டாக்டர் பாரிவேந்தரைப் போலவும் யாரும் செயல்படவில்லை என்று விமர்சித்தார். சென்னை அருகே ராக்கெட் ஏவுதளத்தை கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் கூறியதாகவும், பல்வேறு தொகுப்பு வீடுகள், சோலார் மின்சாரம் என பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடர்ந்து கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார். டாக்டர் பாரிவேந்தர் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரும் ஒரே சிந்தனை உடையவர்கள் எனவும் தெரிவித்தார்.
அதேபோல் கல்லேரி கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்ட அவர், ஜிஎஸ்டி வரியை கொண்டு வந்தது பிஜேபி அல்ல காங்கிரஸ் எனவும், குறிப்பாக ப.சிதம்பரம்தான் அதைத் தொடங்கி வைத்தார் எனவும் குற்றஞ்சாட்டினார். பிரதமர் மோடிக்கும், பாரிவேந்தருக்கும் இரண்டு ஒற்றுமைகள் உள்ளன எனவும், இருவருக்கும் ஒரே எண்ணங்கள், ஒரே கொள்கைகள் உள்ளதாகவும் கூறினார். மேலும், டாக்டர் பாரிவேந்தர் ஒரு விவசாயின் மகன் எனவும், தனி ஒருவராக சென்னைக்கு சென்று நேர்வழியில் படித்து, மற்றவர்களுக்கும் கல்வி மற்றும் பல்வேறு தொழில்களை கொடுத்து, ஒரு ஆசிரியராக இருந்தவர் என புகழாரம் சூட்டினார்.
இதனையடுத்து வலசை கிராமத்தில் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனை ஆதரித்து டாக்டர் ரவி பச்சமுத்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தேசிய மொழியில் தமிழ் மொழியும் முக்கியமானவை என்றும், உலகத்தை தமிழர்கள்தான் ஆள்கிறார்கள் எனவும் கூறினார். மேலும் தமிழர்கள்தான் இன்று உலகம் முழுவதும் வளர்ந்து வருகிறார்கள் எனவும் தேசியத்தை நோக்கியும் பொருளாதரத்தை நோக்கியும் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார்.