GK Vasan Campaign: கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டு தி.மு.க. - காங்கிரஸ் நீலிக்கண்ணீர் வடிக்கிறது - ஜி.கே.வாசன் பேச்சு
”இந்தியா கூட்டணியில் தலை இல்லாமல் வால் மட்டும் ஆடிக்கொண்டிருக்கிறது. தலைவர் யார் என்று சொல்ல முடியாத ஒரு கூட்டணி. மக்கள் எப்படி நம்புவார்கள்”
நெல்லை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் நெல்லை வீரவநல்லூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார். அதைத் தொடர்ந்து த.மா.கா. மாவட்ட அலுவலகத்தில் உள்ள மூப்பனார் சிலைக்கு ஜி கே வாசன் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பிரதமர் வெற்றி உறுதி:
அதைத் தொடர்ந்து ஜி கே வாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்த தேர்தலில் பாஜக வெற்றி பிரகாசமாக இருக்கிறது. தென் மாவட்ட மக்கள் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு இருக்கிறார்கள். பிரதமர் மோடியின் மூன்றாவது வெற்றி பதவி உறுதியானது. அதற்கு இந்திய மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். காரணம் நாட்டின் பாதுகாப்பை அவர்களால் மட்டுமே உறுதி செய்ய முடியும். கொரோனாவுக்கு பிறகு நமது பொருளாதாரம் படிப்படியாக முன்னேறி இன்னும் சில ஆண்டுகளில் 3வது பொருளாதார நிலையில் உயர உள்ளது.
நீலிக்கண்ணீர்:
நேர்மாறாக இந்தியா கூட்டணி தலை இல்லாமல் வால் மட்டும் ஆடிக் கொண்டிருக்கிறது. தலைவர் யார் என்று சொல்ல முடியாத ஒரு கூட்டணி. மக்கள் எப்படி நம்புவார்கள். யார் எதை செய்வார்கள் எப்படி செய்வார்கள் என்று சொல்ல தலைவர் கிடையாது. ஆனால் மக்களை தைரியமாக சந்திக்கின்றனர். மக்களை ஏமாற்ற நினைக்கும் இந்த கூட்டணிக்கு மக்கள் இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள். திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மூன்று வருடங்களாக தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது. மக்கள் திமுக அரசு மீது கோபமாக இருக்கிறார்கள்.
காங்கிரஸ் - திமுக இணைந்து எடுத்த முடிவு தான் கச்சத்தீவு தாரை வார்ப்பு. அன்றைய காங்கிரஸ் கட்சி முடிவுக்கு உடைந்தயாக இருந்தது திமுக. இன்று நீலீக்கண்ணீர் வடிக்கின்றனர். அது மீனவர்களிடம் எடுபடாது. மீனவர்களுக்கு செய்த துரோகம் மறுக்க முடியாத துரோகம். மறக்க முடியாத துரோகம். முழு பூசணிக்காயை அவர்களால் சோற்றில் மறைக்க முடியாது. இனிமேல் மீனவர்களின் வாக்கு அவர்களுக்கு கிடையாது. மோடியின் தலைமையில் மட்டும் தான் கச்சத்தீவை மீட்க முடியும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
தமிழர்கள் மீது மோடிக்கு பற்று:
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தலைவர் செல்வபெருந்தகை இலங்கையில் சென்று நிம்மதியாக வாழ வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்றார். மேலும் பொதுவாக இரண்டு விதமான காய்ச்சல் வரும் உண்மையாகவே காய்ச்சல் வந்தால் நம்மை அறியாமல் புலம்புவோம். அது உடல் காய்ச்சல். தேர்தல் காய்ச்சல் ஒன்று வரும். தேர்தல் காய்ச்சல் எதிர்க்கட்சிகளுக்கு வந்து விட்டதால் தான் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் இனி தேர்தல் நடக்காது என்று எதிர்கட்சிகள் உளறி வருகிறார்கள். மக்கள் அவர்களை கவனித்து வருகிறார்கள்.
இருட்டிலே பாட்டு பாடி செல்பவர்களை போல அவர்களின் பேச்சு உள்ளது. வெள்ள நிவாரண நிதி குறித்து ஏற்கனவே நிதி அமைச்சர் சரியான விளக்கம் கொடுத்துவிட்டார். தமிழர்கள் மீது மோடி மிகவும் பற்று கொண்டுள்ளார். இன்றைய தமிழக வளர்ச்சியில் பெரும் பங்கு மத்திய அரசுக்கு உள்ளது. கொடுத்த பணத்திற்கு எந்த விதமான வெளிப்படை தன்மையும் திமுகவிடம் இல்லை என்பதை அவர்கள் வெள்ளை அறிக்கை மூலம் விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.