Lok Sabha Polls 2024 Date: 7 கட்டங்களாக நடத்தப்படும் நாடாளுமன்றத் தேர்தல்: மார்ச் 14,15ல் வெளியாகிறது தேதி அட்டவணை?
மக்களவைத் தேர்தல் அட்டவணையை மார்ச் 14 அல்லது 15ல் தேர்தல் கமிஷன் அறிவிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களவைத் தேர்தல் அட்டவணையை மார்ச் 14 அல்லது 15ல் தேர்தல் கமிஷன் அறிவிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மிகவும் எதிர்பார்க்கப்படும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் மார்ச் 14 அல்லது 15ஆம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. 2019ஆம் ஆண்டு போன்று ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படலாம் என்றும், ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மார்ச் 14 ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் நடைபெறலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தேர்தல் கமிஷன் விரைவில் செய்தியாளர் சந்திப்பை நடத்த இருக்கிறது. மக்களவை தேர்தல் தேதியை அடுத்த வாரம் எந்த நாளிலும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேர்தல் ஆணையம்:
தற்போது தேர்தல் ஆணைய குழு பல மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை மதிப்பீடு செய்து வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் ஏற்பாடுகளை மதிப்பீடு செய்த பிறகே தேர்தல் தேதியை ஆணையம் அறிவிக்கும். டெல்லிக்கான பொதுத் தேர்தல்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் சந்திப்பு:
தேர்தல் கமிஷன் குழு தற்போது மேற்கு வங்கத்தில் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்பிறகு உத்தரபிரதேசம், ஜம்மு-காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். மார்ச் 13ம் தேதிக்குள் தேர்தல் அதிகாரி தனது சுற்றுப்பயணத்தை முடித்துவிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சுற்று பயணத்தின்போது, அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்:
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்த தேர்தல் ஆணையம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் . இதை பயன்படுத்துவதன் மூலம் சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களைக் கண்டறிந்து அகற்றும் நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்யலாம்.
ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசியல் கட்சிகள்:
தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரச்சாரம் உள்ளிட்ட தத்தமது ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பல கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. கடந்த சனிக்கிழமை மத்தியிலும் ஆளும் பாஜக 195 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை சமீபத்தில் அறிவித்தது. அதே நேரத்தில், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய லோக்தளம் ஆகிய கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.
2019 தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக 543 தொகுதிகளில் 303 இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால் அதன் தற்போதைய மக்களவை உறுப்பினர்களின் பலம் பல்வேறு காரணங்களால் 290 உறுப்பினர்களாகக் குறைந்தது. இந்த முறையும் பிரதமர் மோடி 3வது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என்று இந்தியா முழுவதும் தனது தீவிரமாக தயார் செய்து வருகிறார். தமிழ்நாட்டிலும் பாஜகவின் ஓட்டு எண்ணிகையை உயர்த்த பிரதமர் மோடி கடந்த 2 மாதங்களில் 4 முறை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.