Lok Sabha Election : 295 தொகுதிகள் உறுதி.. அடித்து சொல்லும் காங்கிரஸ் : இதென்ன கணக்கு..!
Lok Sabha Election Results 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் I.N.D.I.A. கூட்டணி நிச்சயம், 295 தொகுதிகளில் வெற்றி பெறும் என காங்கிரஸ் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Lok Sabha Election Results 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக 235 தொகுதிகளுக்கு மேல், வெற்றி பெறாது என காங்கிரஸ் கட்சி ஆருடம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல்:
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி, கடைசி கட்டமாக ஜுன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் வரும் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட உள்ளன. இதனிடயே, பல முன்னணி நிறுவனங்களுக்கும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன. அதில் பெரும்பாலானாவை பாஜகவிற்கு சாதகமாகவே அமைந்துள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணி 160 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்றே தெரிவித்துள்ளன.
295 தொகுதிகள் - அடித்துச் சொல்லும் காங்கிரஸ்..!
இதனிடையே, I.N.D.I.A. கூட்டணி நிச்சயம் 295 இடங்களில் வெற்றி பெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே தெரிவித்துள்ளார். அதேநேரம், பாஜக 235 தொகுதிகளுக்கு மேல், வெற்றி பெறாது எனவும் திட்டவட்டமாக பேசியுள்ளார். பாஜகவிற்கு சாதகமாக கருத்துகள் திணிக்கப்படுகின்றன எனவும், I.N.D.I.A. கூட்டணி கட்சிகள் தெரிவித்து வருகின்றன. பல முன்னணி நிறுவனங்களின் கருத்து கணிப்புகளும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என கணித்திருந்தாலும், அதற்கு வாய்ப்பே இல்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகவும் நம்பிக்கையுடன் திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது.
காங்கிரஸ் போடும் கணக்கு:
காங்கிரஸ் இவ்வளவு உறுதியாக பேசுவதற்கு காரணம், I.N.D.I.A. கூட்டணி கட்சிகளிடமிருந்து ஒவ்வொரு மாநில வாரியாக பெற்ற தரவுகள் தான் என கூறப்படுகிறது. அதன்படி, போட்டியிட்ட தொகுதிகள், அதில் நிச்சயம் வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகள், கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகள் ஆகியவை தொடர்பான கணக்குகளின்படி தான், I.N.D.I.A. கூட்டணி 295 தொகுதிகளில் வெற்றி பெறும் என காங்கிரஸ் பேசி வருகிறது.
மாநில வாரியான கணக்கு:
- உத்தரபிரதேசம் - 40 தொகுதிகள்
- பஞ்சாப் - 13 தொகுதிகள்
- கேரளா - 20 தொகுதிகள்
- ஹரியானா - 7 தொகுதிகள்
- ராஜஸ்தான் - 7 தொகுதிகள்
- மகாராஷ்டிரா - 24 தொகுதிகள்
- பீகார் - 22 தொகுதிகள்
- தமிழ்நாடு + புதுச்சேரி - 40 தொகுதிகள்
- கேரளா - 20 தொகுதிகள்
- மேற்குவங்கம் - 24 தொகுதிகள் (திரிணாமுல் காங்கிரஸ் உட்பட)
- சண்டிகர் - 1 தொகுதிகள்
- டெல்லி - 4 தொகுதிகள்
- சத்தீஷ்கர் - 5 தொகுதிகள்
- ஜார்கண்ட் - 10 தொகுதிகள்
- மத்தியபிரதேசம் - 7 தொகுதிகள்
- கர்நாடகா : 15-16 தொகுதிகள்
இந்த விவரங்களின் அடிப்படையில் தான், I.N.D.I.A. கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது சாத்தியமாகுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.