மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரியாக செயல்படுகிறதா - கரூரில் அலுவலர்கள் சோதனை
தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூர் நாடாளுமன்ற தொகுதியில் 54 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்துதல், அவை சரியாக செயல்படுகிறதா என்பது குறித்து அலுவலர்கள் சோதனை செய்தனர். இப்பணிகளை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான தங்கவேல் ஆய்வு மேற்கொண்டார்.
கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை என 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நாடாளுமன்ற தொகுதியில் குளித்தலை தவிர மற்ற 3 தொகுதிகளும், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை என 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூர் நாடாளுமன்ற தொகுதியில் 54 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இதற்காக ஒரு வாக்குச் சாவடியில் 4 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், ஒரு கட்டுப்பாட்டு கருவி, ஒரு பிரிண்டிங் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. தேர்தல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொறுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் இப்பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் ஒவ்வொரு சின்னத்திற்கு வாக்களிக்கும்போது கட்டுப்பாடு கருவியில் அந்த சின்னத்தில் சரியாக பதிவு ஆகிறதா, அதற்கான ரசீது விழுகிறதா என்பது குறித்து சோதனை செய்து வருகின்றனர். இதே போன்று அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான தங்கவேல் ஆய்வு மேற்கொண்டார். சின்னங்களை பொருத்தும் பணிகள் தொடர்பாக அப்பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அங்கு இருந்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை வாக்களிக்கச் சொல்லி, அவர்கள் போட்ட சின்னத்தில் வாக்கு பதிவாகியதா என்பதை உறுதி செய்து கொண்டார்.