Lok Sabha Election 2024: இன்றுடன் ஓய்கிறது 4ம் கட்ட தேர்தல் பரப்புரை - சூறாவளி பிரசாரம் மேற்கொள்ளும் தலைவர்கள்
Lok Sabha Election 2024: மக்களவை தேர்தலில் நான்காம் கட்ட வாக்குப்பதிவிற்கான பரப்புரை, இன்று மாலையுடன் முடிவடைகிறது.
Lok Sabha Election 2024: மக்களவை தேர்தலில் நான்காம் கட்ட வாக்குப்பதிவிற்கான பரப்புரை இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், நட்சத்திர தொகுதிகளை குறிப்பிட்டு தலைவர்கள் வாக்குகளை சேகரிக்க உள்ளனர்.
நான்காம் கட்ட வாக்குப்பதிவு எப்போது?
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி, நடந்து முடிந்துள்ள மூன்று வாக்குப்பதிவில், மக்களவையில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில், 283 இடங்களுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. கடைசியாக கடந்த 7ம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து, நாளை மறுநாள் (மே.13) நான்காம் கட்டவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நான்காம் கட்ட வாக்குப்பதிவிற்கான தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது.
கவனம் ஈர்க்கும் தென்மாநிலங்கள்:
9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 96 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதில் ஆந்திராவில் உள்ள 25 மக்களவை தொகுதிகளுக்கும், தெலங்கானாவில் உள்ள 17 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனிடையே, ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நாளை மறுநாள் நடைபெற உள்ளதால், நான்காம் தேர்தலில் தென்மாநிலங்கள் அதிக கவனம் ஈர்க்கின்றன.
அனல் பறக்கும் தேர்தல் பரப்புரை:
வாக்குப்பதிவை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். பாஜக, காங்கிரஸ் அகிய தேசிய கட்சிகளோடு, தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆகிய மாநில கட்சிகளுக்கும் முனைப்புடன் வாக்கு சேகரித்து வருகின்றன. நான்காம் கட்ட வாக்குப்பதிவிற்கான பரப்புரையில் பாஜக - காங்கிரஸ் இடையேயான கருத்து மோதல் மேலும் வலுவடைந்தது. அதானி - அம்பானி விவகாரம், தென்மாநில மக்களை காங்கிரஸ் மூத்த தலைவர் நிறவெறியுடன் விமர்சித்ததாக குற்றச்சாட்டு, ராமர் கோயில், ஜிகாத்திற்கு வாக்களிக்காதீர்கள் என பல்வேறு தலைப்புகளில் அரசியல் கட்சி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இன்று மாலையுடன் ஓய்கிறது..!
கொளுத்தும் கோடை வெயிலை காட்டிலும் அனல் அறக்கும் பரப்புரைகளில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டு வரும் நிலையில், நான்காம் கட்ட வாக்குப்பதிவிற்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. பிரதமர் மோடி ஜார்கண்டில் பரப்புரையில் ஈடுபட உள்ளார். இதேபோன்று அரசியல் கட்சி தலைவர்களும் இன்று முக்கிய நட்சத்திர வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்க உள்ளனர்.
96 தொகுதிகள் - 1700+ வேட்பாளர்கள்
ஆந்திராவில் 25 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், ஜம்மு & காஷ்மீரில் 1 தொகுதி, ஜார்கண்டில் நான்கு தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 8 தொகுதிகள், மகாராஷ்ட்ராவில் 11 தொகுதிகள், ஒடிஷாவில் நான்கு தொகுதிகள், தெலங்கானாவில் 17 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 13 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 8 தொகுதிகள் என மொத்தம், 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 96 தொகுதிகளில் வரும் 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் போட்டியிட ஆயிரத்து 717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன் மோகனின் தங்கை ஒய்.எஸ். ஷர்மிளா, எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் களம் காண்கிறார். மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பீகாரில் களம் காண்கிறார். மற்றொரு மத்திய அமைச்சரான அர்ஜுன் முண்டா ஜார்கண்டில் போட்டியிடுகிறார். அசாதுதீன் ஓவைசி மற்றும் மத்திய அமைச்சரான கிஷன் ரெட்டி ஆகியோர் தெலங்கானாவில் போட்டியிடுகின்றனர். நடிகர் சத்ருகன் சின்ஹா மேற்குவங்கத்தில் களம் காண்கிறார்.