Local body election: 'நீட் தேர்வு குறித்துப் பேச அதிமுகவிற்கு அருகதை இல்லை' - ஜவாஹிருல்லா விமர்சனம்.
"ஒரே நாடு", "ஒரே கொள்கை", "ஒரே ரேஷன்" போன்று ஒரே தேர்தலை மத்திய அரசு கொண்டு வந்தால் அந்தந்த மாநில அரசு உரிமைகள் பறிக்கப்படும்.
நீட் விவகாரத்தில் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தராத அதிமுக, நீட் குறித்து பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை என தெரிவித்துள்ள மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும் எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் நடந்து வரும் நிலையில், சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு மாநகராட்சி, 6 நகராட்சி மற்றும் முப்பத்தி ஒரு பேரூராட்சிகள் என மொத்தம் 699 பதவிகளுக்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து சேலம் மாவட்டத்தில் பல்வேறு தலைவர்கள் முகாமிட்டு தங்களது வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டுமென தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாநகராட்சி பொருத்தவரை 60 வார்த்தைகளில் மொத்தம் 618 பேர் போட்டியிடுகின்றனர். திமுக கூட்டணி, அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக என பெரும்பாலான கட்சிகள் 60 வார்டுகளிலும் போட்டியிடுகின்றனர். இதற்கான பிரச்சாரத்தில் அந்தந்த கட்சியின் தலைவர்கள் நேரடியாக சேலம் மாவட்டத்தில் மக்களை சந்தித்து தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இதன்படி, இன்று சேலத்தில் 31 ஆவது கோட்டத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஷேக் இமாமை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா கோட்டை பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், அதிமுகவினர் மேற்கொள்ளும் பொய் பிரச்சாரத்தினால் திமுக கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றார். மேலும் நீட் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடவில்லை; அதிமுகதான் இரட்டை வேடம் போடுவதாக தெரிவித்த அவர் நீட் விவகாரத்தில் சட்டப்பேரவை தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்காததால் நீட் குறித்து பேச அதிமுகவிற்கு எந்த அருகதையும் இல்லை என சாடினார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து பேசிய அவர், இதுவரை இந்தியாவில் ஹிஜாப் தடை செய்த வரலாறே கிடையாது என்ற அவர் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பு இருப்பதால் சிறுபான்மையினரின் வாக்குகளை பிரிப்பதற்காக பாஜகவின் இந்த சூழ்ச்சியை கையில் எடுத்துள்ளதாக குற்றம் சாட்டினார். "ஒரே நாடு ஒரே தேர்தல்" குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "ஒரே நாடு", "ஒரே கொள்கை", "ஒரே ரேஷன்" போன்று ஒரே தேர்தலை மத்திய அரசு கொண்டு வந்தால் அந்தந்த மாநில அரசு உரிமைகள் பறிக்கப்படும் என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.