Local Body Election | தேனி மாவட்டத்தில் போட்டியின்றி வெற்றி பெற்ற 4 வேட்பாளர்கள்
குறிப்பிட்ட பிரிவினர் அதிகமாக இருப்பதால் அவர்களே ஒன்று கூடி பேசி முன்கூட்டியே வேட்பாளரை தேர்வு செய்து வேட்பாளரை நிறுத்தி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
தேனி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் 22 பேரூராட்சிகள் பதவிக்கான உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள வார்டுகளில் போட்டியிடுவதற்கு பெரும்பாலும் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளில் நகர் மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு பெண்களுக்கு ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு இன்று இறுதி கட்டமாக வேட்பு மனு திரும்பி பெற்றுக்கொள்ள கடைசி நாளில் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு சில வார்டுகளில் போட்டியின்றி வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடலூர் நகர்மன்ற உறுப்பினர் பதவி 6வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட பத்மாவதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக அதிமுக சார்பில் தேவி என்பவரும், பாஜக சார்பில் லட்சுமணன் ஆகியோரும் போட்டியிட்டனர். இதில் பாஜக வேட்பாளர் தனது வேட்பு மனுவில் தொடர்பு எண்ணை மாற்றி எழுதியதால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் திமுக அதிமுக வேட்பாளர்கள் இடையே நேரடி போட்டியிருந்த நிலையில்,
இன்று அதிமுக வேட்பாளர் தேவி என்பவர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவித்துள்ளார். அதன் பெயரில் வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொண்ட தேவி எதிரில் போட்டியிட யாரும் இல்லாத நிலையில் திமுக வேட்பாளர் பத்மாவதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. திமுக வேட்பாளர் பத்மாவட்தி வெற்றி பெற்றுள்ளது தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் முதல் வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது.
அதிமுக வேட்பாளர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் அதிமுகவினர் இடையே சற்று அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் தேர்வு செய்யப்பட்ட பத்மாவதியின் கணவர் லோகன் துரை 1ஆவது வார்டில் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவர் தற்போது திமுக நகர செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் குச்சனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 7வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த பந்தனம். அதிமுகவைச் சேர்ந்த நாகஜோதி ஆகிய இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இன்று அதிமுக சார்பாக போட்டியிடவிருந்த நாகஜோதி தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டதால் திமுகவைச் சேர்ந்த பந்தனம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பெரியகுளம் வடுகபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் 1வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட முத்துச்செல்வி என்பவர் போட்டியிட ஆள் இல்லாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதே பகுதியைச் சேர்ந்த 10 வது வார்டில் சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜெயராம் என்பவர் எதிர்த்து போட்டியிட யாரும் இல்லாததால் 10வது வார்டு உறுப்பினராக ஜெயராம் போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 1வது வார்டு மற்றும் 10வது வார்டு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதற்கான காரணமாக கூறப்படுவது. இந்த இரு வார்டுகளிலும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அதிகமாக இருப்பதால் அவர்களே ஒன்று கூடி பேசி முன்கூட்டியே வேட்பாளரை தேர்வு செய்தும் அதற்கு எதிராக யாரும் போட்டியிடக்கூடாது என பேசிய பின் வார்டு மக்கள் அறிவிக்கப்பட்டவர்களே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்