குறைந்த டிபாசிட் தொகை கட்டியதால் பாஜக வேட்பு மனு தள்ளுபடி... ஆங்கிலம் மீது வேட்பாளர் புகார்!
Karur Urban Local Body Election 2022: ஆங்கிலத்தில் எழுதியிருந்தால், படிக்காத எங்களால் எப்படி அறிய முடியும், என வேட்பாளர் சீதா புகார் தெரிவித்தார்.
கரூர் மாநகராட்சியில்நேற்று வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், இன்று வேட்பு மனு பரிசீலனை நடந்து வருகிறது. இதில் அனைத்து வேட்பாளர்களும் வருகை தந்து பரிசீலனையில் பங்கேற்றனர். பொது வார்டான 38வது வார்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சீதா செந்தில் குமார் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அவரும் நேற்று தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
இன்று பரிசீலனை நடைபெற்ற போது சீதா செந்தில் குமாரின் வேட்பு மனு நிராகரிக்கப்படுவதாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கமணி தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த அவர், அதற்கான காரணத்தை கேட்டார். கவுன்சிலர் வேட்பாளருக்கு செலுத்த வேண்டிய டெபாசிட் தொகை 4000 ரூபாய்க்கு பதிலாக 2000 ரூபாய் மட்டுமே டெபாசிட் தொகை கட்டப்பட்டுள்ளதாகவும், எனவே அந்த மனுவை நிராகரிக்கப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் பதிலளித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த சீதா செந்தில்குமார், கருவூலத்தில் கூறிய பணத்திற்கு தான், தான் டிபாசிட் செய்ததாகவும், பணத்தை குறைத்து கட்ட வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்று கூறினார். அதற்கு, ‛அங்கு அது தொடர்பான நோட்டீஸ் ஒட்டியுள்ளதாக,’ அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. அங்கு சென்று பார்த்த போது, அது ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆங்கிலத்தில் எழுதியிருந்தால், படிக்காத எங்களால் எப்படி அறிய முடியும், அதுமட்டுமின்றி அவர்கள் குறிப்பிட்ட தொகையை தான் நான் செலுத்தினேன் என வேட்பாளர் சீதா புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவரை சமரசம் செய்யும் முயற்சிகள் நடந்து வருகிறது. பாக்கி இருக்கும் ரூ.2000 டிபாசிட் தொகையை செலுத்தினால் மனுவை ஏற்க வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அவரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சீதா, ‛‛டிபாசிட் செலுத்துவதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. அதற்கான வாய்ப்பை வழங்காமல், என் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதில் தேர்தல் அலுவலர் குறியாக இருக்கிறார்’’ என்றார்.
சீதாவின் மனு ஏற்கப்படுமா எல்லது முன் அறிவித்தபடி தள்ளுபடி செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். ஆங்கிலத்தை குறை கூறும் வேட்பாளர், அவர்கள் சார்ந்த கட்சி இந்திக்கு முக்கியம் தரும், அதை படிப்போரின் நிலையை புரிந்து கொள்ளட்டும் என விமர்சனங்களையும் சிலர் முன்வைக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்