எவ்வாறு நடைபெறும் வாக்கு எண்ணிக்கை? எப்போது தெரியும் முடிவு?
தமிழ்நாடு,கேரளா,மேற்கு வங்கம், அசாம்,புதுச்சேரி ஆகிய மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம்,புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. இந்த மாநிலங்களில் பதிவாகிய வாக்குகள் நாளை காலை 8 மணி முதல் தொடங்க உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவில் அதிகரித்து வருவதால். இம்முறை வாக்கு எண்ணிக்கை நடைமுறைகளுடன் கொரோனா தடுப்பு நடைமுறைகளும் கடைபிடிக்கப்பட உள்ளது.
வாக்கு எண்ணிக்கை நடைமுறை:
- காலை 5 மணிக்கு ஒவ்வொரு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கும் வாக்குகளை எண்ணும் அதிகாரிகள் ரெண்டமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
- வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பாக வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்பு அதிகாரிகள் சரிபார்ப்பார்கள்.
- அதன்பின்னர் காலை 8 மணி முதல் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும்.
- முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன்பின்னர் 8.30 மணி முதல் வாக்குப்பதிவு இயந்திர வாக்குகள் எண்ணப்படும்.
- வாக்குகள் எண்ணப்படும் ஒவ்வொரு மேசையிலும் எண்ணும் அதிகாரிகளுடன் வேட்பாளர்களின் முகவர்கள் இருப்பார்கள்.
- ஒவ்வொரு சுற்று முடிவிலும் வாக்குகளை எண்ணும் அதிகாரி மற்றும் வேட்பாளரின் முகவர்கள் முடிவில் கையெழுத்து இடுவார்கள். அவர்களுக்கு பிறகு தேர்தல் நடத்தும் அதிகாரியும் கையெழுத்து இடுவார். அதன்பின்பு சுற்றின் முடிவுகள் அறிவிக்கப்படும்.
- இந்த மொத்த வாக்கு எண்ணிக்கை நடைமுறையும் கேமராவில் பதிவு செய்யப்படும்.
- ஒவ்வொரு தொகுதியிலும் 5 வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்குகள் விவிபேட் உடன் ஒப்பிட்டு பார்க்கப்படும்.
- ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்குகள் விவிபேட் உடன் சரியாக பொருந்தவில்லை என்றால் அந்த இயந்திரத்தின் வாக்குகள் மீண்டும் எண்ணப்படும்.
- இரண்டாவது முறையும் வாக்குகள் சரியாக பொருந்தவில்லை என்றால் விவிபேட் முறையில் வந்த எண்ணிக்கையே இறுதியானதாக அறிவிக்கப்படும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்:
கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும் ஊழியர்கள், முகவர்களுக்கு முழு ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெளியே பொதுமக்கள் திரள அனுமதியில்லை.
வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வரவேண்டும் அல்லது கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை செலுத்தியிருக்க வேண்டும். அத்துடன் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வரும் போது உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்படும். முகவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தால் மாற்று முகவரை வேட்பாளர் நியமிக்கலாம்.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளே கடைபிடிக்க வேண்டும். அவருக்கு தேவையான உதவியை சுகாதார அதிகாரி வழங்க வேண்டும்.தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு மே 2ஆம் தேதி எந்த ஒரு வெற்றிக் கொண்டாட்டத்துக்கும் அனுமதி கிடையாது. வெற்றி பெறும் வேட்பாளருடன் இரண்டு பேருக்கு மேல் வெற்றிச் சான்றிதழ் பெற வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.