ERODE MP: காலையிலேயே சோகம்..! மதிமுகவைச் சேர்ந்த ஈரோடு எம்.பி. கணேச மூர்த்தி காலமானார்
ERODE MP: ஈரோடு எம்.பி., கணேச மூர்த்தி மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ERODE MP: மதிமுகவைச் சேர்ந்த ஈரோடு எம்.பி. கணேச மூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கணேச மூர்த்தி எம்.பி., காலமானார்:
கடந்த சில நாட்களுக்கு முன்பு பூச்சி மருந்து உண்டதாக அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட ஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. கணேச மூர்த்தியின் மறைவிற்கு மதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளாக திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, கணேச மூர்த்தியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று பார்த்துவிட்டது வந்தது குறிப்பிடத்தக்கது.
வைகோ இரங்கல்:
கணேச மூர்த்தி மறைவு தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினரும், இளமைக் காலம் தொட்டு தியாக வேங்கையாக என்னோடு பயணம் செய்த ஆருயிர் சகோதரர் அ.கணேசமூர்த்தி மறைவுச் செய்தி கேட்டு ஆராத் துயரமும், அளவிட முடியா வேதனையும் அடைந்தேன்” என தெரிவித்துள்ளார்.
யார் இந்த கணேசமூர்த்தி?
1947ம் ஆண்டு ஜுன் 10ம் தேதி பிறந்த கணேசமூர்த்தி, 1978-இல் திமுக மாணவரணி பொறுப்பில் இருந்து பின்னர் ஒருங்கிணைந்த பெரியார் (ஈரோடு) மாவட்ட திமுக செயலாளராக பொறுப்பு வகித்தார். 1993ம் ஆண்டு திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றப்பட்ட போது அவருக்கு ஆதரவாக வெளியேறிய, ஒன்பது மாவட்ட செயலாளர்களில் கணேசமூர்த்தியும் ஒருவர். மதிமுக தொடங்கியதிலிருந்து ஈரோடு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்தவர், 2016ம் ஆண்டில் மதிமுக பொருளாளர் ஆனார். 1998 ஆம் ஆண்டு மக்களவைத் பொதுத்தேர்தலில் பழநி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். தொடர்ந்து 2009, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், ஈரோடு தொகுதியிலிருந்து மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2019ம் ஆண்டு திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதை தொடர்ந்து, மதிமுக பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
76 வயதான வர் ஏற்கனவே இரண்டு முறை மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மதிமுகவின் மிக மூத்த மற்றும் குறிப்பிடத்தக்க தலைவர்களில் இவரும் ஒருவராவார். வைகோவின் மனசாட்சி என்றும் இவர் அறியப்பட்டார். இந்நிலையில், இந்த முறை ஈரோடு தொகுதிக்கு பதிலாக திருச்சி தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டது. அதில், வைகோ மகன் துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த சூழலில் தான், கடந்த 24ம் தேதியன்று கணேசமூர்த்தி பூச்சி மருந்து உண்டதாக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.