'திமுக ஆட்சி மீது குறைசொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் இல்லை' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். முன்னதாக, சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் 5 ரோடு சந்திப்பில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் சேலம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 31 பேரூராட்சிகளில் போட்டியிடும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அமைச்சர் கே.என் நேரு இன்று காலை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர், மாலை நடைபெற்ற வேட்பாளர்களை ஆதரித்து சென்னை அறிவாலயத்தில் இருந்து காணொலி வாயிலாக பேசிய முதலமைச்சர், இதே போல் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரது சொந்த மாவட்டத்திற்கு என்ன செய்தார் என்று பட்டியலிட முடியுமா என கேள்வி எழுப்பிய அவர் திமுக கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பொது மக்களை ஏமாற்றியதாக முன்னாள் முதல்வர் கூறுகிறார்; சொன்னது மட்டுமல்லாமல் சொல்லாத பல திட்டங்களையும் திமுக அரசு நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி எதை கவர்ச்சியான வாக்குறுதி என்று சொல்கிறார். அவரது ஆட்சி காலத்தில் நடந்த கொலை கொள்ளைகளை தொடர்புடையவர்களை கண்டுபிடிக்க முடியாதவர்கள். கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் அப்போது உண்மைகளை சொல்லாதவர்கள் தற்போது பல உண்மைளை சொல்ல முன் வருகிறார்கள். கொடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரிக்க சட்டரீதியாக காவல்துறை விசாரிக்க உரிமை உண்டு. அதன்படி விசாரணை நடக்கிறது. இதுவும் நாங்கள் கொடுத்த வாக்குறுதிதான் இதில் அரசியல் உள்நோக்கம் இல்லை.
பின்னர், சேலம் மாவட்டத்தில் 8 மாதங்கள் திமுக ஆட்சி பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார். அதுமட்டுமின்றி திமுக ஆட்சி காலத்தில் சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது, குறிப்பாக சேலம் உருக்காலை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் இரயில்வே கோட்டம், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷலிடி மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டது என்று பட்டியலிட்டார்.
இதேபோல் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என குறை சொல்ல அவருக்கு எந்த அருகதையும் இல்லை என்றார். சேலம் மாவட்டத்தில் மாநகராட்சி , நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் காணொலிக் கட்சியை மக்கள் பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.