UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
புதிய BBS திட்டத்தின் கீழ் மூன்று இந்திய மொழிகளை அறிமுகப்படுத்த அனைத்து கல்லூரிகளுக்கும் உத்தரவு- யுஜிசி அறிவிப்பு.

புதிய பாரதிய பாஷா சம்மான் திட்டத்தின் கீழ், பாடத்திட்டங்களில் மூன்று இந்திய மொழிகளை அறிமுகப்படுத்த அனைத்து கல்லூரிகளுக்கும் யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழு (UGC), மாணவர்களிடையே பன்மொழிக் கற்றலை ஊக்குவிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் 'மற்றொரு இந்திய மொழியைக் கற்றுக்கொள்வோம்' என்னும் புதிய திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து யுஜிசி செயலாளர் மணிஷ் ஜோஷி வெளியிட்ட அறிக்கையில், ’’இந்தியா ஆங்கிலத்தை மையமாகக் கொண்ட கல்வி முறையில் இருந்து, இந்திய மொழிக் கற்றல் சூழல் அமைப்புக்கு மாறி வருகிறது. இந்திய மொழிகள் குறித்த அறிவைப் பெறுவது 'வளர்ந்த இந்தியா- 2047' என்ற இலக்கை அடைவதற்கு அத்தியாவசியமானது. இது இளைஞர்களின் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை மேம்படுத்தும்’’ என்று அவர் தெரிவித்தார்.
திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்படுத்தல் எப்படி?
நிறுவனங்கள் இந்திய மொழிகளை கிரெடிட் அடிப்படையிலான பாடங்களாக வழங்க வேண்டும் என்றும், மாணவர்கள் அவற்றை எடுத்துக்கொள்ள ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தாய்மொழி தவிர ஒரு கூடுதல் இந்திய மொழியைக் கற்றுக்கொள்வது பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்பட வேண்டும் என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கல்லூரியும் குறைந்தது மூன்று இந்திய மொழிகளை தங்கள் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்த வேண்டும். இதில் ஒரு மொழி அந்தந்த மாநிலத்தின் உள்ளூர் மொழியாக இருக்க வேண்டும், மற்ற இரண்டு மொழிகள் இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 இந்திய மொழிகளில் இருந்து தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த மொழிகள் விருப்பப் பாடங்களாகவோ அல்லது கூடுதல் பாடங்களாகவோ கற்பிக்கப்படலாம்.
நன்மைகள் என்ன?
- பன்மைத்துவம்: இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும்.
- வேலைவாய்ப்பு: பல மொழிகளில் திறன்களைப் பெறுவது மாணவர்களின் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை அதிகரிக்கும்.
- அறிவுப் பரிமாற்றம்: இந்திய மொழிகளில் அறிவு உற்பத்தி மற்றும் பரிமாற்றத்தை மேம்படுத்தும்.
- கலாச்சார இணைப்பு: வெவ்வேறு கலாச்சாரங்களுக்கு இடையே ஒரு வலுவான பிணைப்பை உருவாக்கும்.
இந்திய மொழிகளில் அறிவைப் பெறுவது, மொழி மற்றும் கலாச்சாரத் தடைகளை உடைத்து, மாணவர்களை பரந்த அளவில் சிந்திக்கவும், வெவ்வேறு சமூகங்களுடன் தொடர்பு கொள்ளவும் உதவும். இது தேசிய அளவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் இந்திய இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். 'வளர்ந்த இந்தியா-2047' என்ற லட்சியத்தை அடைவதற்கு பன்மொழித் திறன் ஒரு முக்கிய கருவியாக இருக்கும் என்று நம்புவதாக யுஜிசி தெரிவித்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில்..
யுஜிசியின் இந்த நடவடிக்கை, தேசிய கல்விக் கொள்கை 2020-ன் (NEP 2020) இலக்குகளுடன் ஒத்துப்போகிறது, இது இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதையும், மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கல்லூரிகள் இந்த திட்டத்தைச் செயல்படுத்த தேவையான உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆசிரியப் பயிற்சிக்கு ஆதரவளிக்குமாறும் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.






















