பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
தமிழ்நாடு அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இது பொருந்தும்.

அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், கல்வியாண்டின் பாதியில் ஓய்வு பெற்று, அந்த கல்வியாண்டின் இறுதிவரை பணியை தொடரும் பட்சத்தில், அவர்களுக்கு சம்பளத்தில் எந்த பிடித்தமும் செய்யக்கூடாது என்றும் ஓய்வு பெறும்போது அவர்கள் பெற்ற மொத்த சம்பளத்தை அப்படியே வழங்க வேண்டும் எனவும் நிதித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பின்னணி என்ன?
முன்னதாக, CPS திட்டத்தில் மறு நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு மறு நியமன பணி காலத்தில் 20% ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டு 80 சதவீத ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டது. இதை கருவூல கணக்குத் துறைக்கும், நிதி துறையில் கவனத்திற்கும் ஆசிரியர் அமைப்புகள் கொண்டு சென்றன.
அதன் அடிப்படையில் கருவூலக்கணக்குத்துறை ஆணையர் நிதித்துறையில் இது தொடர்பாக விளக்கம் கோரி இருந்தார். தற்போது மறுபணி நியமன காலத்தில் அவர்கள் கடைசியாக பெற்ற ஊதியம் முழுவதையும் பெற்று வழங்கலாம் என்று நிதித்துறை சார்பில் தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிதித்துறை செயலர் உதயசந்திரன் தெரிவித்துள்ளதாவது:
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மறுநியமனம் தொடர்பாக உரிய தெளிவுரைகள் வேண்டி பல்வேறு ஆசிரியர் சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை அரசு கூர்ந்தாய்வு செய்ததன் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கல்வி மற்றும் பயிற்சி பயிற்றுவிக்கும் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள் வயது முதிர்வின் காரணமாக தொடர்புடைய கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறுவதால் மாணவர்களின் கல்வி எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு அவ்வாசிரியர் தொடர்புடைய கல்வியாண்டின் இறுதிவரை பணிபுரிய ஏதுவாக கீழ்க்கண்ட நிபந்தனைகளுடன் மறுநியமனம் செய்திட தெளிவுரை வழங்கப்படுகிறது.
- பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெற்று, மறு நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் அவர்கள் வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெறும் நாளன்று ஓய்வு பெற அனுமதித்து தனியே ஒரு ஆணை தகுதியுடைய அதிகாரி அளவில் (Competent Authority) வெளியிடப்பட வேண்டும்.
- பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு அரசாணை நிலை எண். 59, நிதி (ஓ.கு.தீ) துறை, நாள் 22.02.2016-இல் வெளியிடப்பட்டுள்ள வழிமுறைகள் மற்றும் அது சார்ந்த அரசால் வெளியிடப்பட்டுள்ள அறிவுரைகளின்படி அவர்களுக்குடைய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழான இறுதித் திரண்ட தொகையினை பெற்று வழங்க வேண்டும்.
- ஒரு கல்வியாண்டின் இடையில் ஓய்வுபெறும் ஆசிரியர்களை, மறுநியமனம் செய்வதற்கான விருப்பக்கடிதம் ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட வேண்டும். தொடர்புடைய ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட வேண்டும்.
- மேற்படி மறுநியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் வயது முதிர்வில் ஓய்வு பெற்ற நாளுக்கு மறுநாள் முதல் தொடர்புடைய கல்வி ஆண்டு முடியும் வரை / தேவை உள்ள வரை இதில் எது முந்தையதோ அதுநாள் வரை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்து ஆணை வெளியிடப்பட வேண்டும்.
- மேற்சொன்ன ஆசிரியர்கள் மறுநியமனத்தின் போது அவர்கள் இறுதியாக பெற்ற மொத்த ஊதியத்தினை (Gross Salary) ஒப்பந்த அடிப்படையிலான ஊதியமாக (Contractual Payment) வழங்கப்பட வேண்டும். அவர்களிடமிருந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழான பணியாளர் மற்றும் அரசுப் பங்களிப்பு ஆகியவற்றினை பிடித்தம் செய்ய தேவையில்லை.
- பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு பிடித்தம் செய்யப்படும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்குண்டான மாதந்திர சந்தாத் தொகையே. மறுநியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பொருட்டு மாதாந்திர சந்தாத் தொகையாக மறுநியமன ஒப்பந்த காலம் முழுவதும் பிடித்தம் செய்யப்பட வேண்டும்.
- மறுநியமனம், செய்யப்படும் ஆசிரியர்களுடைய இறுதி மாத ஒப்பந்த ஊதியம் தொடர்புடைய பணிநியமனம் செய்த அதிகாரி அளவில் இழப்பில்லா சான்று (No Dues Certificate) பெற்ற பின்னர் வழங்கப்பட வேண்டும். இழப்புகள் ஏதேனும் அவருடைய இறுதி மாத ஒப்பந்த ஊதியத்திற்கு மிகைப்பட்டிருப்பின் அது குறித்து அரசின் உரிய தெளிவுரைகளை பெற்று மேல்நடவடிக்கை தொடரப்பட வேண்டும்.
- 01.04.2003-க்கு பின்னர் இதுநாள் வரை மறுநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மேற்சொன்ன மறுநியமன பணிக்காலத்திற்கான ஊதிய நிர்ணயத்தின் அளவில் குறைவாக பெற்றிருப்பின் தொடர்புடைய வித்தியாசத் தொகை சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு பெற்று வழங்கப்பட வேண்டும்.
- கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியரின் பணியிடத்தினை அக்கல்வியாண்டு முடியும் வரை காலிப்பணியிடமாக அறிவிக்கப்படக்கூடாது. மேலும் அக்கல்வியாண்டில் மறுநியமனம் செய்யப்படும் ஆசிரியர் மூலம் கல்விப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்று மறுநியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு அவர்கள் பொருட்டு ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த மறுநியமன வழிமுறைகள் எவ்வித மாற்றமுமின்றி பின்பற்றப்படும்.
- மேற்படி மறுநியமனம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தொடர்புடைய அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விடுப்பு, பணியமைப்பு மற்றும் ஏனையவை தொடர்பாக நடப்பில் உள்ள விதிகள் / வழிமுறைகள் எவ்வித மாற்றமுமின்றி பின்பற்றப்படும் என்றும் அரசு நிதித்துறைச் செயலர் உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.






















