Important Constituencies | ஓ.பன்னீர்செல்வம் முதல் உதயநிதி வரை.. முக்கிய வேட்பாளர்களும், போட்டியிடும் தொகுதி நிலவரமும்..
தமிழ்நாட்டின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதன்முதலில் போட்டியிட்டு வென்ற தொகுதி போடி. தேனி மக்களவைத் தொகுதிக்கு உட்பட போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதலமைச்சரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி
கோவில்பட்டி, தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதி. 2021 சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியில் 67.43 சதவிகித வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இது தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடும் தொகுதி. 2011-2016, 2016-2021 என இரண்டுமுறை இந்தத் தொகுதியிலிருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்தத் தொகுதியிலிருந்து அதிகம் வெற்றிபெற்றது கம்யூனிஸ்ட் கட்சி. கடம்பூர் ராஜூவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கே.சீனிவாசன், மக்கள் நீதி மய்யத்தின் கதிரவன், நாம் தமிழர் கட்சியின் கோமதி ஆகியோர் களமிறங்கியுள்ளனர். இவர்கள் தவிர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டி.டி.வி. தினகரனும் இந்தத் தொகுதியில் போட்டியிடுவதால் இந்தத் தொகுதியின் தேர்தல் முடிவுகள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றன. 2016 தேர்தலில் இங்கே 39. 52 சதவிகித வாக்காளர்கள் வாக்களித்தனர். கடம்பூர் ராஜூ அந்தத் தேர்தலில் தனக்கு எதிராகப் போட்டியிட்ட திமுகவின் சுப்ரமணியத்தை 428 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மொத்த வாக்காளர்கள்: 2,64,900
ஆண்கள்: 1,29,484
பெண்கள்: 1,35,385
திருநர்கள்: 31
போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதன்முதலில் போட்டியிட்டு வென்ற தொகுதி போடி. தேனி மக்களவைத் தொகுதிக்கு உட்பட போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதலமைச்சரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இவருக்கு எதிரான வலுவான போட்டியாக திராவிட முன்னேற்றக்கழகத்தின் தங்க தமிழ்செல்வன் களம் காண்கிறார்.இவர்கள் தவிர மக்கள் நீதி மய்யத்தின் கணேஷ்குமாரும் நாம் தமிழர் கட்சியின் முத்துசாமியும் போட்டியிடுகின்றனர்.
2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக லட்சுமணனை 15608 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் பன்னீர்செல்வம். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போடி தொகுதியை உள்ளடக்கிய தேனியிலிருந்து பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 2016 தேர்தலில் இங்கே 49.86 சதவிகித வாக்குகள் பதிவாகின. மொத்த வாக்காளர்கள் சதவிகிதம் 73.65.
மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 2,77,964
ஆண்கள்: 1,36,050
பெண்கள்: 1,41,893
திருநர்கள்: 21
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி
மறைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகனின் வெற்றித் தொகுதி. 2016 தேர்தலில் அவர் அதிமுகவின் நூர்ஜஹானை 14164 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அப்போதைய வாக்காளர் சதவிகிதம் 48.50. சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட சேப்பாக்கம் திருவல்லிக்கேனி தொகுதியின் 2021-ஆம் ஆண்டுக்கான மொத்த வாக்காளர் சதவிகிதம் 58.41. இந்தத் தேர்தலில் திமுகவின் உதயநிதி ஸ்டாலின், பாட்டாளி மக்கள் கட்சியின் கஸலி, மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணியான ஐ.ஜே.கே.விலிருந்து முகம்மது இட்ரிஸ் நாம் தமிழர் கட்சியின் ஜெயசிம்மராஜா மற்றும் அமமுகவின் எல்.ராஜேந்திரன் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர். உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் தொகுதி என்பதால் இது கவனிக்கத்தக்க தொகுதியாக இருக்கிறது.
மொத்த வாக்காளர் எண்ணிக்கை: 2,34,319
ஆண்கள்: 1,15,080
பெண்கள்: 1,19,204
திருநர்கள்: 35
தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி
அ.தி.மு.க.வின் எஸ்.பி.வேலுமணி, தி.மு.க.வின் கார்த்திகேய சிவசேனாபதி என வலுவான வேட்பாளர்களுடன் இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி. 2016 சட்டமன்றத் தேர்தலில் வேலுமணி 64041 வாக்குகள் வித்தியாசத்தில் இந்தத் தொகுதியில் வெற்றிபெற்றார். இந்தமுறை மக்கள் நீதி மய்யம் சார்பில் ஷாஜஹான், நாம் தமிழர் கட்சியிலிருந்து கலையரசி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து சதீஷ்குமார் ஆகியோரும் இந்தத் தொகுதியில் போட்டியிடுகின்றனர். பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி மற்றும் கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட இந்தத் தொகுதியில் 2016-ஆம் ஆண்டு வாக்களர்கள் சதவிகிதம் 55.92. 2021 தேர்தல் வாக்களர்களின் சதவிகிதம் 71.04.
மொத்த வாக்காளர்கள்: 3,24,053
ஆண்கள்: 1,60,579
பெண்கள்: 1,63,398
திருநர்கள்: 76
திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி
திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்டது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,திமுகவிலிருந்து சங்கர், அதிமுக சார்பில் குப்பன் மற்றும் அமமுக சார்பில் சௌந்தரபாண்டியன் ஆகியோர் இந்தத் தொகுதியில் போட்டியிடுகின்றனர். 2016ல் இந்தத் தொகுதியின் வாக்காளர் சதவிகிதம் 43.93. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கே.பி.பி.சாமி 4873 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் பால்ராஜைத் தோற்கடித்தார். அதே 2021 சட்டமன்றத் தேர்தலில் இந்தத் தொகுதியின் வாக்காளர் சதவிகிதம் 65.
மொத்த வாக்காளர்கள்: 3,04,777
ஆண்கள்: 1,50,309
பெண்கள்: 1,54,323
திருநர்கள்: 145