Arunachal, Sikkim Results: அருணாச்சல பிரதேசம், சிக்கிமில் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை! முன்னணியுடன் தொடங்கிய பா.ஜ.க.!
வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிமில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் மிகவும் முக்கியமான மாநிலங்களில் சிக்கிம் மற்றும் அருணாச்சலபிரதேசம் தவிர்க்க முடியாத மாநிலங்கள் ஆகும். நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுடன் இணைந்து இந்த இரண்டு மாநிலங்களுக்கும் சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது.
தொடங்கிய வாக்கு எண்ணிக்கை:
நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் சில மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
முன்னணியில் பா.ஜ.க.:
அருணாச்சல பிரதேசத்தைப் பொறுத்தவரை அந்த மாநிலத்தில் ஏற்கனவே பா.ஜ.க. வேட்பாளர்கள் 10 பேர் போட்டியின்றி நேரடியாக தேர்வு செய்யப்பட்டு விட்டனர். இதனால், அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் எஞ்சிய 50 தொகுதிகளுக்கான உறுப்பினர்கள் யார் என்பதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. சிக்கிம் மாநிலத்தில் மொத்தமுள்ள 32 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கான சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதால், இந்த இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் முன்கூட்டியே வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது.
போட்டியின்றி தேர்வான அருணாச்சல பிரதேசம் முதலமைச்சர்:
வழக்கமாக வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும். ஆனால், இந்த இரண்டு மாநிலங்களிலும் காலை 6 மணிக்கே தொடங்கப்பட்டுவிட்டது. அருணாச்சல பிரதேசத்தை பொறுத்தவரையில் கடந்த முறை 60 தொகுதிகளில் பா.ஜ.க. 41 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
இந்த முறை போட்டியின்றி வெற்றி பெற்ற 10 பா.ஜ.க. வேட்பாளர்களில் அந்த மாநில முதலமைச்சர் பீமா காண்டுவும் ஒருவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஏற்கனவே 3 முறை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட முக்தோ தொகுதியில் இருந்து இந்த முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிக்கிம் நிலவரம் என்ன?
சிக்கிம் மாநிலத்தைப் பொறுத்தவரையில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவிற்கும், சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அந்த மாநிலத்தில் உள்ள 32 தொகுதிகளிலும் இரண்டு கட்சிகளும் நேரடியாக மோதுகிறது. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பா.ஜ.க. புதிய கட்சியான சிக்கிம் சிட்டிசன் ஆக்ஷன் கட்சியுடன் இணைந்து 30 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் சிக்கிம் ஜனநாயக கட்சியின் 25 ஆண்டுகால ஆட்சியை சிக்கிம் கிராந்திகாரி கட்சி முடிவுக்கு கொண்டு வந்தது.