Andhra Assembly Elections: அடித்து உடைக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள்! ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - தெலுங்கு தேசம் மோதல் - ஆந்திராவில் பரபரப்பு
Andhra Assembly Elections: ஆந்திர சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவை ஒட்டி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களிடையே பல இடங்களில் மோதல் ஏற்பட்டுள்ளது.

Andhra Assembly Elections: ஆந்திர சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர தேர்தலில் மோதல்:
ஆந்திராவில் உள்ள 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் மோதிக்கொண்டதால் பல பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக பல்நாடு மாவட்டத்தில் பல பகுதிகளில் மோதல்கள் நடைபெற்று வருகின்றன.
தாகேபள்ளி, கேசனப்பள்ளி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் கடும் பதற்றம் ஏற்பட்டது. வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்துச் செல்வது தொடர்பான மோதலில், தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் காயமடைந்தனர்.
கடப்பா, அன்னமையா மாவட்டங்களிலும் மோதல்:
கடப்பா மாவட்டத்திலும் பல இடங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது. கமலாபுரம் பகுதியில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். மைதுகுருவில் தெலுங்கு தேசம் கட்சியின் வாக்குச்சாவடி முகவர் தாக்கப்பட்டுள்ளார். அன்னமையா மாவட்டம், கோடூர் தொகுதி, புல்லாம்பேட்டா மண்டலம் மற்றும் பாப்பக்கா கரி கிராமத்தில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தெலுங்கு தேசம் கட்சி முகவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
ஜெகன் மாதா தேவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் , கள்ள ஓட்டு போட வந்தவர்களை அப்பகுதி மக்கள் அடையாளம் கண்டு பிடித்தனர். அவர்கள் அனைவரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வந்ததாக தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். 5 பேரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ரெண்டசிந்தலா மண்டலத்தில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஒய்சிபி பிரிவினர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். மோதலில் 3 தெலுங்கு தேசம் கட்சி முகவர்கள் காயமடைந்தனர். பல இடங்களில் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. புல்லாம்பேட் மண்டல் தலாய்பள்ளியில் உள்ள ஒரு சாவடியில் சிலர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கீழே போட்டு உடைத்ததாகவும் சில வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
#ElectionsWithTNIE | Thugs vandalize EVMs in a booth in Dalaipalle of Pullampet Mandal, Annamayya district@NewIndianXpress pic.twitter.com/INk5nCmh5O
— TNIE Andhra Pradesh (@xpressandhra) May 13, 2024
பூத் ஏஜெண்டுகள் கடத்தல்:
புங்கனூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள சதும் மண்டலத்தைச் சேர்ந்த போரகமண்டா பகுதியில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 15 பூத் ஏஜெண்டுகளை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெத்திரெட்டி ராமச்சந்திரா ஆட்கள் கடத்திச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாக்குப்பதிவு மையத்திற்கு சென்றபோது, 15 பேரும் அடித்து கட்டாயப்படுத்தி ஒரு வாகனத்திற்குள் ஏற்றி கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஜெகன் மோகன் மற்றும் சந்திர பாபு நாயுடு இடையே, சட்டமன்ற தேர்தலில் நேரப்போட்டி நிலவி வருகிறது. இந்த சூழலில் பூத் ஏஜெண்டுகள் கடத்தப்பட்டதாக எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையம் அதிரடி:
மோதல் சம்பவங்களுக்கு தேர்தல் ஆணையம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. நிலைமையை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், கூடுதல் படைகளை இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

