கரூர் பட்டாளம்மன் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர்
இந்த முறை 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். எம்பி ஜோதிமணி தொகுதி பக்கமே வரவில்லை.
கரூர் பட்டாளம்மன் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பாராளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் கரூர் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தங்கவேல் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோடங்கிபட்டி பகுதியில் அமைந்துள்ள பட்டாளம்மன் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு, தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிமுக வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து திறந்த வேனில் நின்றபடி அப்பகுதி பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து முத்தலாடம்பட்டி, தாந்தோணிமலை, பொன் நகர், ராயனூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், “பொதுமக்களிடம் எங்களுக்கு நல்ல ஆதரவு இருக்கிறது. ஏனென்றால் கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பொய்களை சொல்லி வெற்றி பெற்றனர். இந்த முறை 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். எம்பி ஜோதிமணி தொகுதி பக்கமே வரவில்லை. திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது. போதை பொருட்களால் இளைஞர் சமுதாயம் தடுமாறுகிறது. அனைத்திலும் விலைவாசி உயர்ந்துள்ளது” என்றார்.