(Source: ECI/ABP News/ABP Majha)
Vishal: "திரும்பி பார்க்க வைக்கும் பேச்சு, செயல்பாடு, பொறுமை" - அண்ணாமலையை புகழ்ந்த நடிகர் விஷால்!
இந்தியாவில் மக்களவை தேர்தல் திருவிழா நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவானது நடைபெறுகிறது.
பாஜகவை சமீபகாலமாக எல்லாரும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் அண்ணாமலையின் செயல்பாடு இருப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மக்களவை தேர்தல் திருவிழா நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவானது நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளையுடன் பரப்புரை ஓய்கிறது. இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பொதுமக்களும் தேர்தலில் வாக்களிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனிடையே நடிகர் விஷால் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக அவர் கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் உரிய நேரத்தில் இயற்கை அழைத்தால் மக்களுக்கான பணிகளை மேற்கொள்வேன் என்ற ரீதியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இப்படியான நிலையில் நடிகர் விஷால் நடிப்பில் ஏப்ரல் 26 ஆம் தேதி ‘ரத்னம்’ படம் வெளியாகவுள்ளது.
இதற்கான ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபடும் விஷால், நேர்காணல்களில் அரசியல் தொடர்பான கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை மற்றும் ராதிகா சரத்குமார் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஷால் அளித்த பதில்களை காணலாம்.
அண்ணாமலை
பாஜகவை சமீபகாலமாக எல்லாரும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் அண்ணாமலையின் பேச்சு, செயல்பாடு, பொறுமை, அணுகுமுறை, செய்தியாளர் சந்திப்பில் கோபப்படாமல் பதில் சொல்வது என அனைத்தும் உள்ளது. இந்த முறை மக்களவை தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் நிற்கிறார். சிறந்த வேட்பாளர் வெற்றி பெறுவார் என நம்புறேன். அண்ணாமலைக்கும் வெற்றி கிடைக்கும் என நினைக்கிறேன். நான் அவரை மீட் பண்ணியதில்லை. அடிக்கடி மெசெஜ் மட்டும் பண்ணுவோம். வெவ்வெறு கட்சியாக இருந்தாலும் எல்லோரையும் படம் பார்க்க அழைப்பேன். ஏதாவது விஷயங்கள் செய்யும் போது இருவரும் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வோம். என் கட்சியில் சேருங்க என்கிற ரீதியில் அரசியல் எல்லாம் பேச மாட்டார். எங்களுக்குள் நல்ல உறவு என்பது உள்ளது.
ராதிகா சரத்குமார்
ராதிகா மேடம் விருதுநகரில் நிற்கிறார்கள். அவருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனை எதிர்த்து பாஜக சார்பில் நிற்கிறார். அவருக்கு இது புது பரிணாமம். ஒரு நடிகையாக இருந்து சித்தியாக எல்லார் வீட்டுக்கும் சென்று இன்று அரசியல் ரீதியாக நிற்கிறார். ராதிகா மிகவும் தைரியமானவர். மனதில் இருப்பதை தைரியமாக பேசுவார்கள். குஷ்பூ, நதியா போன்றவர்களும் வெளிப்படையாக பேசுவார்கள் என விஷால் கூறியுள்ளார்.