DMK vs Congress: 41 தொகுதியா.. 21 தான் தர முடியும்.! அடித்து சொல்லும் திமுக- அலறி துடிக்கும் காங்கிரஸ் - நடப்பது என்ன.?
DMK vs Congress: திமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறையை விட 4 இடங்கள் குறைவாகவே கொடுக்க முடியும் என திமுக தலைமை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெருங்கும் தேர்தல்- கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்னும் ஒரு வார காலத்தில் அறிவிக்கவுள்ளது. இதனையடுத்து ஏப்ரல் மாதம் மத்தியில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இன்னும் 50 நாட்கள் மட்டுமே தேர்தலுக்கு உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. இதில் ஆளுங்கட்சியான திமுக, கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்துள்ளது
அந்த வகையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியானது திடீரென ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதி ஒதுக்கீடு என திமுகவிற்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியது. அதிலும் காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழு பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் ஆட்சியில் பங்கு வேண்டும் என தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார்.
திமுகவிற்கு நெருக்கடி கொடுத்த காங்கிரஸ்
மறு பக்கத்தில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூரும் சமூகவலைதளத்தில் ஆட்சியில் பங்கு, திமுகவின் தோல்வி அடைந்த தொகுதிகள் என விமர்சித்து வந்தார். இதனால் இரு தரப்பு நிர்வாகிகளுக்கு மத்தியில் மோதல் ஏற்பட்டதையடுத்து அதிருப்தி அடைந்த திமுக தலைமை, கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்காமல் அமைதி காத்தது. கடந்த டிசம்பர் மாதம் முதல் பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்து காங்கிரஸ் காத்திருந்த நிலையில்,காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழு பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கருடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக தலைமை மறுத்ததாகவும், குழுவின் தலைவரை மாற்ற வேண்டும், மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமைக்கு திமுக அறிவுறுத்தியது.
ஒரு வழியாக குழுவை அமைத்த திமுக
இந்த நிலையில் திமுக தலைமை தங்களது கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்த கடந்த வாரம் குழுவை அமைத்தது. முஸ்லிம் லீக், மதிமுக, மமக ஆகிய கட்சிகளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு தற்போது வரை அழைப்பு விடுக்கவில்லை. அந்த வகையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபல் திமுக தலைவர் ஸ்டாலினையும், கிரிஸ் சோடங்கர் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழியை சந்தித்து பேசினார். அப்போது ஆட்சியில் பங்கு தொடர்பான கோரிக்கையை காங்கிரஸ் கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. எனவே கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கிரிஸ் சோடங்கர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே காங்கிரஸ் கட்சிக்கு குறைந்தது 41 தொகுதிகளை கண்டிப்பாக வழங்க வேண்டும் என விடாப்பிடியாக இருந்துள்ளார். ஆனால் திமுக தரப்போ கடந்த சட்டமன்ற தேர்தலைவிட இந்த தேர்தலுக்கு கூடுதல் கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளது.
21 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க திமுக திட்டம்
எனவே மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கடந்த முறையை விட இந்த முறை மற்ற கட்சிகளுக்கு குறைவான தொகுதிகளே ஒதுக்கப்படும், எனவே காங்கிரஸ் கட்சிக்கு கடந்தமுறை 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது 21 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஆனால் காங்கிரஸ் தரப்பு இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த சூழ்நிலையில் தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்றுள்ள நிலையில், வருகிற 26ஆம் தேதி முதல் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. எனவே அப்போது காங்கிரஸ் கட்சி தங்களது தொகுதியை குறைத்து கொள்ள ஒப்புக்கொண்டாலோ அல்லது திமுக காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்தாலோ அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே தற்போது வரை இருதரப்பிற்கும் இடையே இழுபறி நிலை தான் ஏற்பட்டுள்ளது.























