Governor RN Ravi: நேதாஜி இல்லாவிட்டால் நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது - ஆளுநர் ஆர்.என்.ரவி
நம்முடைய வரலாற்றை எப்போதும் நாம் மறந்துவிடக்கூடாது. சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்களை நாம் நினைவில் வைக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
நேதாஜி இல்லாவிட்டால் நமக்கு 1947-ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்திருக்காது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
நேதாஜி இல்லாவிட்டால் சுதந்திரம் கிடையாது:
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127ஆவது பிறந்தநாள் விழா இன்று (ஜனவரி 23ஆம் தேதி) நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுதந்திரப் போராட்ட தியாகிகள் பலர் கவுரவிக்கப்பட்டனர். தியாகிகளின் குடும்பத்தினரும் விழாவில் கலந்துகொண்டனர். அண்ணா பல்கலை. விவேகானந்தர் அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ’’நம்முடைய வரலாற்றை எப்போதும் நாம் மறந்துவிடக்கூடாது. சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்களை நாம் நினைவில் வைக்க வேண்டும். நேதாஜி இல்லாவிட்டால் நமக்கு 1947-ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்திருக்காது.
ஆனால் நாம் நன்றி உடையவர்களாக இல்லை. தேசம் நன்றியுடைய மக்களைக் கொண்டிருக்கவில்லை. இந்திய தேசத்துக்கு நேதாஜி அளித்த பங்களிப்புகள் குறித்த வரலாற்றை, பெருமையுடன் நாம் மீட்டெடுக்க வேண்டும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின், ஒத்துழையாமை இயக்கம் செய்ததைப் பாருங்கள். 1942-க்குப் பிறகு, இந்திய தேசிய காங்கிரஸில் எந்த செயல்பாடும் நடைபெறவில்லை. நமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தோம். முகமது ஜின்னா தனிநாடு வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது பிரிட்டிஷாரிடம் சுதந்திரம் வேண்டும், இல்லையென்றால் எதற்குமே ஒத்துழைக்க மாட்டோம் என்று கூறிக் கொண்டிருந்தோம். ஆனால் அவற்றுக்கு பிரிட்டிஷார் செவி சாய்க்கவில்லை.
புரட்சியில் ஈடுபட்ட இந்தியர்கள்
அதே நேரத்தில் வீரர்கள் நிறைந்த நேதாஜியின் ராணுவப் படை களத்தில் பிரிட்டிஷாரை எதிர்த்தது. அவர்கள் ஒருங்கிணைந்து செயல்படக் கூடிய இந்திய வீரர்களாக இருந்தார்கள். எனினும் 1945ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய தேசிய ராணுவம் கலைக்கப்பட்ட பிறகு, சில மாதங்களுக்கு உள்ளாகவே, பிரிட்டிஷ் படையில் இருந்த இந்தியர்கள் புரட்சியில் ஈடுபட்டார்கள். 1946, பிப்ரவரி மாதம் இந்த கலகம் ஏற்பட்டது. இந்தியப் பெருங்கடலில் இருந்த 20 பிரிட்டிஷ் போர்க் கப்பல்களை இந்தியர்கள் சிறைப் பிடித்தனர்.
இந்திய விமானப் படையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது. இது பிற நிர்வாகப் படைகளிலும் எதிரொலித்தது. எங்கிருந்து அவர்களுக்கு இந்த உத்வேகம் வந்தது? நேதாஜியின் புரட்சிகரமான தலைமை இதைச் சாதித்தது.
காரணம் யார்?
பிரிட்டிஷார்கள், இனி இந்திய வீரர்களுக்கு தங்களுக்காக வேலை செய்ய வைக்க முடியாது என்பதை உணர்ந்தார்கள். மார்ச் 1946-ம் ஆண்டில் முதன்முதலாக, இந்தியாவை விட்டு பிரிட்டிஷ் 15 மாதங்களில் வெளியேறும் என்று அறிவித்தார்கள். இதற்கு இந்திய வீரர்களும் நேதாஜியும் முக்கியக் காரணம். இந்த கோணத்தில் யாருமே அதிகம் பேசியதில்லை.
சிறப்புகள் நிறைந்த, விடுதலைக்காகப் போராடிய நேதாஜியை எப்படி, இந்திய விடுதலை இயக்க வரலாற்றின் கடைசியில் வைக்க முடிகிறது?’’ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.