UGC Fellowship Scheme: ஆராய்ச்சி மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்: அதிரடியாக உதவி தொகையை உயர்த்திய யுஜிசி!
இளநிலை, முதுநிலை ஆராய்ச்சியாளர் உட்பட ஆராய்ச்சி திட்டங்களுக்கான ஆய்வு மாணவர்களுக்கான உதவித் தொகையை யுஜிசி உயர்த்தியுள்ளது.
இளநிலை, முதுநிலை ஆராய்ச்சியாளர் உட்பட ஆராய்ச்சி திட்டங்களுக்கான ஆய்வு மாணவர்களுக்கான உதவித் தொகையை யுஜிசி உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலர் மணிஷ் ஜோஷி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
’’இந்திய மாணவர்களிடையே ஆராய்ச்சி மனப்பான்மையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு உதவித் தொகை திட்டங்களை யுஜிசி செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற யுஜிசி கூட்டத்தில், ஆராய்ச்சித் திட்டங்களுக்கான உதவித் தொகையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆராய்ச்சியாளர்களுக்கு உதவித் தொகை
இதையடுத்து, பல்வேறு உதவித் தொகை திட்டங்களுக்கான தொகை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது ஜேஆர்எஃப் எனப்படும் இளநிலை ஆராய்ச்சியாளர்களுக்கு (Junior Research Fellowship) மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.31 ஆயிரத்தில் இருந்து ரூ.37 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்ஆர்எஃப் எனப்படும் முதுநிலை ஆராய்ச்சியாளர்களுக்கான (Senior Research Fellowship) உதவித் தொகை ரூ.35 ஆயிரத்தில் இருந்து ரூ.42 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
இதேபோல, ஒற்றைப் பெண் குழந்தைகளின் ஆராய்ச்சிப் படிப்புக்கான சாவித்ரிபாய் ஜோதிராவ் பூலே உதவித் தொகை- ஜேஆர்எஃப் பிரிவுக்கு ரூ.31 ஆயிரத்தில் இருந்து ரூ.37 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இதுவே முதுநிலை ஆராய்ச்சியாளர்களுக்கான பிரிவுக்கு ரூ.35 ஆயிரத்தில் இருந்து ரூ.42 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
இதையும் வாசிக்கலாம்: NAS Exam: நவ.3-ல் மாநில திறனறித் தேர்வு; தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் 11 கோடி மாணவர்கள் பங்கேற்பு
முதுகலை முனைவர் உதவித் தொகை
இவை தவிர, டாக்டர் டி.எஸ். கோத்தாரி முதுகலை முனைவர் உதவித் தொகை (Dr DS Kothari Post Doctoral Fellowship - DSKPDF) திட்டத்தில் முதலாம் ஆண்டு ரூ.58 ஆயிரம், 2-ம் ஆண்டு ரூ.61 ஆயிரம், 3-ம் ஆண்டு ரூ.67 ஆயிரம் என்ற அளவில் மாதந்தோறும் அளிக்கப்படும். முன்னதாக இந்த உதவித் தொகை முறையே முதலாம் ஆண்டு ரூ.47 ஆயிரம், 2-ம் ஆண்டு ரூ.49 ஆயிரம், 3-ம் ஆண்டு ரூ.54 ஆயிரம் என்ற அளவில் மாதந்தோறும் வழங்ககப்படும்.
கூடுதல் விவரங்களை www.ugc.ac.in என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்’’.
இவ்வாறு பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலர் மணிஷ் ஜோஷி தெரிவித்துள்ளார்.
உதவித் தொகை உயர்வு குறித்து முழுமையாக அறிய https://www.ugc.gov.in/pdfnews/8257915_Revision-of-Fellowship-amount-english.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
இதையும் வாசிக்கலாம்: APAAR: ”Pre KG முதல் PhD வரை” - ஆதார் போல் வரும் அபார்: மாணவர்களுக்கும் ’ஒரே’ திட்டத்தை கொண்டுவரும் மத்திய அரசு!