NAS Exam: நவ.3-ல் மாநில திறனறித் தேர்வு; தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் 11 கோடி மாணவர்கள் பங்கேற்பு
மாநில அளவிலான திறனறித் தேர்வு, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் பள்ளிக் கல்வித்துறையால் நவம்பர் 3ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
3, 6, 9-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக ‘எஸ்இஏஎஸ்’ என்னும் மாநில அளவிலான திறனறித் தேர்வு, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் பள்ளிக் கல்வித்துறையால் நவம்பர் 3ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 11 கோடி மாணவர்கள் எழுதுகின்றனர்.
நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக தேசிய சாதனை ஆய்வு தேர்வு (National Achievement Survey- NAS) நடத்தப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தத் தேர்வை மத்தியக் கல்வி அமைச்சகம் நடத்துகிறது. இந்த தேர்வு மதிப்பீட்டின் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் கண்டறியப்பட்டு, தேவையான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாவட்ட அளவில் (district level) இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
பாரக் தேர்வு மதிப்பீடு அமைப்பு நடத்தும் தேர்வு
இந்தத் தேர்வை பாரக் எனப்படும் முழுமையான வளர்ச்சிக்கான அறிவின் செயல்திறன் மதிப்பீடு, மதிப்பாய்வு மற்றும் பகுப்பாய்வு அமைப்பு (Performance Assessment, Review and Analysis of Knowledge for Holistic Development - PARAKH) நடத்துகிறது. என்சிஇஆர்டி அமைப்பின்கீழ் பாரக் அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வட்ட அளவில் (block level) 3, 6, 9-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக ‘எஸ்இஏஎஸ்’ (State Educational Achievement Survey- SEAS) என்னும் மாநில அளவிலான திறனறித் தேர்வு, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் பள்ளிக்கல்வித் துறையால் நவம்பர் 3ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 11 கோடி மாணவர்கள் எழுத உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து 7.42 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
கற்றல் திறன் மதிப்பீடு
இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநர் ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 3, 6 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் மதிப்பீடு செய்யப்பட உள்ளது. இதற்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் டயட் (மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்) முதல்வர்கள் ஆகியோர் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்ப்பதாகக் கூறி வரும் நிலையில், தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களை படிப்படியாக மாநில அரசு அமல்படுத்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாம்: APAAR: ”Pre KG முதல் PhD வரை” - ஆதார் போல் வரும் அபார்: மாணவர்களுக்கும் ’ஒரே’ திட்டத்தை கொண்டுவரும் மத்திய அரசு!