100 days Reading Campaign :‘பதே பாரத்’ 100 நாள் படிக்கும் பிரச்சாரம் - இன்று தொடங்கி வைக்கிறார் கல்வி அமைச்சர்
‘பதே பாரத்’ என்ற 100 நாள் படிக்கும் பிரச்சாரத்தை மத்திய கல்வி அமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.
‘பதே பாரத்’ என்ற 100 நாள் படிக்கும் பிரச்சாரத்தை மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (ஜனவரி 1ம் தேதி) தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து, மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;
"மாணவர்களின் படைப்பாற்றல், விவேக சிந்தனை, சொல்வளம், பேச்சு மற்றும் எழுத்து மூலமாக வெளிப்படுத்தும் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதில் இந்த 100 நாள் படிக்கும் பிரச்சாரம் முக்கியமான நடவடிக்கையாகும். இது தங்களின் சுற்றுச்சூழலை, நிஜ வாழ்க்கையுடன் தொடர்புபடுத்த குழந்தைகளுக்கு உதவும்.
ஆரம்ப பள்ளி முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்காக இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஜனவரி 1ஆம் தேதி முதல் 100 நாட்களுக்கு (14 வாரங்கள்) ஏப்ரல் 10 ஆம் தேதி வரை இந்த பிரச்சாரம் நடத்தப்படும்.
#100DaysReadingCampaign aims to motivate students (up to grade VIII) to read books and other supplementary material and thereby develop creativity, critical thinking, vocabulary & the ability to express both verbally & in writing. The campaign starts on 1st Jan,2022. #PadheBharat pic.twitter.com/lp7NJbKhny
— Ministry of Education (@EduMinOfIndia) December 29, 2021
இதில் குழந்தைகள், ஆசிரியர்கள், சமுதாயம், கல்வித்துறை நிர்வாகிகள் என அனைவரின் பங்களிப்பும் இருக்கும். படிப்பதை சுவாரஸ்யமாக மேற்கொள்ளும் வகையில், ஒரு குழுவுக்கு வாரம் ஒரு பயிற்சி உருவாக்கப்பட்டுள்ளது. இது படிக்கும் மகிழ்ச்சியை வாழ்நாள் முழுவதும் ஏற்படுத்த உதவும்.
குழந்தைகளின் வயதுக்கு ஏற்றபடி, இந்த படிக்கும் பிரச்சாரத்தின் பயிற்சிகள் குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் பகிரப்பட்டுள்ளன. இந்த பயிற்சிகளை குழந்தைகள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உதவியுடன் செய்ய முடியும். இந்த படிக்கும் பிரச்சாரத்தை பயனுள்ளதாக்க, இந்த பயிற்சிகள் எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன.
ஒரு வேளை பள்ளிகள் மூடப்பட்டாலும், வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே, குடும்ப உறுப்பினர்கள் உதவியுடன். இந்த பயிற்சிகளை எளிதாக செய்ய முடியும்.
இவ்வாறு,அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் ``21வது நூற்றாண்டில் பள்ளிக் கல்வி'' என்ற தலைப்பிலான மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், " 3வது கிரேடு முடிக்கும் எந்த ஒரு குழந்தையும் ஒரு நிமிடத்தில் 30 முதல் 35 வார்த்தைகளை எளிதாகப் படிக்கும் தகுதியைப் பெறுவது உறுதி செய்யப்பட வேண்டும். இந்த நிலையை எட்டிவிட்டால், மற்ற பாடங்களில் உள்ள விஷயங்களை எளிதில் புரிந்து கொள்ளும் பக்குவம் வந்துவிடும்" என்று தெரிவித்தார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்