இந்திய மாணவர்களுக்கு நற்செய்தி.. இங்கிலாந்தில் திறக்கிறது விண்ணப்பிப்பதற்கான கதவுகள்..!
பிரிட்டனில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பு முடிந்து பட்டம் பெற்றதும் 2 ஆண்டுகள் பணியில் தொடர பணி விசா வழங்கப்பட்டு வந்தது.
பிரிட்டனில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்காக அந்நாட்டு உள்துறை செயலர் ஓர் அற்புதமான செய்தியை வெளியிட்டுள்ளார்.
பொதுவாக வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்கள் ஸ்டூன்ட் விசாவில் தான் செல்வார்கள். ஆகையால் அவர்களில் கல்வி பயிலும் காலம் முடிந்ததும் அவர்கள் தாய்நாடு திரும்ப நேரிடும். இதில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு நடைமுறையைப் பின்பற்றுகிறது. ஒருசில நாடுகள் கல்வி முடித்து ஆறு மாதங்கள் வரையிலும் சில நாடுகள் ஓராண்டு வரையிலும் அங்கேயே தங்கி தகுந்த வேலை தேடிக்கொள்ள அனுமதிக்கிறது. இந்நிலையில், பிரிட்டன் அரசு அந்நாட்டில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்குப் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்திய மாணவர்கள் பெரும் நன்மை பெறுவார்கள் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
தெரசா விதித்த தடை; நீக்கிய போரிஸ்..
பிரிட்டனில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பு முடிந்து பட்டம் பெற்றதும் 2 ஆண்டுகள் பணியில் தொடர பணி விசா வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2012ல் பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்ற தெரசா மே, அந்த நடைமுறையை ரத்து செய்து 4 மாதங்கள் மட்டும் பணி விசா வழங்கினார். இதனால் பிரிட்டனில் கல்வி பயில வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இந்நிலையில் அடுத்து பிரதமராக வந்த போரிஸ் ஜான்சன் இது குறித்து ஆய்வு செய்து அதில் மாற்றத்தை கொண்டு வந்தார். முதற்கட்டமாக 4 மாத விசாவை 6 மாதமாகவும், முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு 1 ஆண்டும் அதிகரித்து உத்தரவிட்டார். அப்போதே, விரைவில்
வெளிநாட்டு மாணவர்கள், பட்டம் பெற்றதும் முன்பு போல் 2 ஆண்டுகள் பணி விசா வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி, தற்போது பழைய நடைமுறை உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது.
உள்துறை செயலர் அறிவிப்பு:
இது குறித்து அந்நாட்டு உள்துறை செயலர் ப்ரீத்தி படேல் கூறுகையில், "இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு கல்வி பயில வரும் மாணவர்கள் இனி தங்கள் படிப்பை முடித்து இரண்டு ஆண்டுகள் வரை அங்கேயே தங்கியிருந்து தங்களின் கல்வித் தகுதி, திறமைக்கு ஏற்ப வேலை தேடிக் கொள்ளலாம்" என்றார்.
இதுமட்டுமல்லாமல், பிரிட்டனில் பட்டம் பயில விரும்பும் மாணவர்கள் முதன்முறையாக ஆன்லைனிலேயே முழுமையாக விண்ணப்பிக்கலாம். முறையான ஆவணங்களுடன் சரியாக விண்ணப்பிப்பவர்கள் இவிசா பெறலாம். இதற்கான ஆப்பை மாணவர்கள் தங்களின் ஸ்மார்ட் ஃபோனிலேயே டவுன்லோடு செய்துகொள்ளலாம் என டெல்லியில் உள்ள பிரிட்டன் துணை தூதரக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் மாணவர்கள் மிக எளிதாக விசா பெற முடியும். இதற்கு முன்னதாக மாணவர்கள் யுகே விசா மற்றும் குடியேற்ற மையத்துக்கு நேரில் சென்று தங்களின் பயோமெட்ரிக் அடையாளங்களைப் பதிவு செய்தே விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது.