(Source: Poll of Polls)
UGC NET Answer Key: யுஜிசி நெட் தேர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்புகள் வெளியீடு; ஆட்சேபிப்பது எப்படி?
UGC NET Provisional Answer Key: தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் மாத அமர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்புகளை யுஜிசி தற்போது வெளியிட்டுள்ளது.
முன்னதாக ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. இவர்களுக்கான விடைக் குறிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் (Assistant professor ) பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship- JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.
தேசியத் தேர்வுகள் முகமையால் நடத்தப்படும் நெட் தேர்வு
இந்தத் தேர்வு என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை கணினி முறையில் நடத்தப்படுகிறது. 2018ஆம் ஆண்டு முதல் கணினி முறையில் இந்தத் தேர்வு ஜூன், டிசம்பர் ஆகிய 2 மாதங்களில் நடத்தப்படுகிறது. முந்தைய காலங்களில் பல்வேறு தினங்களுக்கு ஆஃப்லைன் முறையில் தேர்வு நடந்த நிலையில், தற்போது 83 பாடங்களுக்கும் ஒரே நாளில் ஆன்லைனில் நெட் தேர்வு நடக்கிறது.
இந்த நிலையில் ஜூன் மாத அமர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து யுஜிசி நெட் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ’’ஆகஸ்ட் 27, 28, 29 மற்றும் 30 மற்றும் செப்டம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் மாற்றி அமைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வு நடைபெற்றது. இவர்கள் எழுதிய தேர்வுக்கான விடைக் குறிப்புகள், https://ugcnet.nta.ac.in/ என்ற இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் இதில் ஏதேனும் முரண்கள் இருந்தால், ஆட்சேபிக்கலாம். இதில் ஒவ்வொரு கேள்விக்கும் ரூ.200 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்தத் தொகை திருப்பி அளிக்கப்படாது.
தேர்வர்கள் செப்டம்பர் 13ஆம் தேதி இரவு 11.50 மணி விடைக் குறிப்புகளுக்கு ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம். கட்டணத்தைச் செலுத்தவும் செப்.13 கடைசித் தேதி ஆகும். கட்டணத்தை அளிக்காமல், ஆட்சேபனைகளை என்டிஏ ஏற்றுக்கொள்ளாது’’ என்று தெரிவித்துள்ளது.
விடைக் குறிப்புகளை ஆட்சேபிப்பது எப்படி?
* என்டிஏ அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்துக்குச் செல்லவும்.
* ஆன்சர் கீ தொடர்பாக Challenge(s) க்ளிக் செய்யவும்.
* விண்ணப்ப எண், பிறந்த தேதி, பாதுகாப்பு குறியீட்டு எண் ஆகியவற்றை லாகின் செய்ய வேண்டும்.
* 'View Answer Sheet' பக்கத்தை க்ளிக் செய்து, 'Challenge' என்ற பொத்தானை க்ளிக் செய்து, விடைக் குறிப்புகளை ஆட்சேபிக்கலாம்.
* ‘Choose File' என்பதைத் தேர்வு செய்து, ஒரே பிடிஎஃப் கோப்பாகப் பதிவேற்றம் செய்யலாம்.
* தொடர்ந்து ‘Submit and review Claims' என்ற தெரிவை க்ளிக் செய்யவும்.
* சப்மிட் செய்வதற்கு முன்னதாக, ‘Modify your Claims' என்ற பக்கத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்தால் செய்துவிட்டு, ‘Final Submit' கொடுக்கவும்.
* மாற்றங்களை க்ளிக் செய்து, ‘Pay Now' பொத்தானை க்ளிக் செய்து, பணத்தைச் செலுத்தவும்.
தேர்வர்கள் https://ugcnet.nta.ac.in/images/public-noticeanswer-key-challengeugc-net-june-2024-ii.pdf என்ற இணைப்பிலும் இதுகுறித்த தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: https://ugcnet.nta.ac.in