TNPSC Group 4: அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம்... டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டித் தேர்வர்களின் குரல் அரசை எட்டுமா?
TNPSC Group 4 Vacancy: ஆண்டுக்கு 30,000 காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டிய அரசு அதில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை அறிவித்திருப்பது எங்களுக்கு ஏமாற்றத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
73.6 லட்சம் - இது என்ன எண் தெரியுமா? அரசாங்க வேலைக்காக விண்ணப்பித்துவிட்டுக் காத்திருப்போரின் எண்ணிக்கை. இவர்களில் முதுகலை பொறியியல், மருத்துவம், சட்டம் முடித்தோரும் உண்டு.
தனியார் துறைகளில் உச்சப் பதவியில் இருப்பவர்கள்கூட எந்தத் தருணத்திலும் தூக்கி எறியப்படக்கூடிய அபாயத்தில் இருக்கும்போது, அரசு வேலைகளின் பாதுகாப்பான பணி சூழலும், பொருளாதார மீட்பும் மக்களை ஈர்க்கும் அம்சங்களாக உள்ளன.
முக்கியமாக, அதிகாரத்தை நோக்கிய பயணமாகவும் அரசுப்பணி அமைகிறது. அதனால்தான் 'தமிழ்நாடு அரசு வேலை தமிழர்களுக்கே' என்ற முழக்கம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் தலைவர்களும் இதை முன்னிறுத்தி வருகின்றனர். இதனால் அரசுப்பணி மீதான ஆர்வமும் மோகமும் மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி (TNPSC) எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் அரசுப் பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதன்படி குரூப் 4 தேர்வுக்கும் எழுத்துத் தேர்வு மூலம் ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
குரூப் 4 பதவிகளைப் பொறுத்தவரை 7 வகையான பணிகள் உள்ளன.
1.கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer)
2.இளநிலை உதவியாளர் (Junior Assistant)
3.நில அளவையர் (Surveyer)
4.வரைவாளர் (Draftman)
5.வரி தண்டலர் (Bill Collector)
6.தட்டச்சர் (Typist)
7.சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno Typist)
இவர்களுக்கான அடிப்படைத் தகுதி 10-ம் வகுப்புத் தேர்ச்சி. ஒற்றை எழுத்துத் தேர்வு மூலம் அரசுப்பணி உறுதி செய்யப்படுவதால், இந்தத் தேர்வுக்கு போட்டி அதிகமாக இருக்கிறது.
குவிந்த விண்ணப்பங்கள்
2022ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்காக டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இல்லாத வகையில் 21,85,328 பேர் விண்ணப்பித்தனர். இதற்கு முன்னதாக 2017-ம் ஆண்டில் 20.76 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த முறை விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 21.5 லட்சத்தைக் கடந்தது. இதில் பெண்களே அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த 21.8 லட்சம் தேர்வர்களில், 18.5 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர்.
இந்த பணிகளுக்கு 7,301 இடங்கள் மற்றும் 81 விளையாட்டு வீரர்களுக்கான பணியிடங்கள் என மொத்தம் 7,382 காலி இடங்கள் இருந்த நிலையில், மொத்தப் பணியிடங்கள் 10,117 ஆக அதிகரிக்கப்பட்டன. தேர்வு நடைபெற்று 7 மாதங்கள் ஆகியும் தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில், #WeWantGroup4Results என்னும் ஹேஷ்டேக் மார்ச் 8 அன்று இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டானது. இதைத் தொடர்ந்து 8 மாதங்கள் கழித்து மார்ச் 24ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின.
2023 தேர்வு எப்போது?
இந்த நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான குரூப் 4 பணியிடங்களுக்கான அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இதற்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை பிறகு தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ள சூழலில், 2024ஆம் ஆண்டு பிபிரவரி மாதம் தேர்வு நடைபெறும் என்றும் மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இறுதி அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா?
அண்மையில் ஆவின் எனப்படும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகம் ஆகிய துறைகளிலும் ஆட்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படுவர் என்று அரசு அறிவித்தது.
முன்னதாக திமுக தேர்தல் அறிக்கையில், 3.50 லட்சம் காலி பணியிடங்கள் ஆட்சிக்கு வந்ததும் நிரப்பபபடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான குரூப் 4 அறிவிப்பு வெளியானதை அடுத்து குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளனர். இவை அனைத்தையும் சுட்டிக்காட்டி போட்டித் தேர்வு மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதமும் எழுதி உள்ளனர்.
3 ஆண்டுக்குப் பிறகு நடந்த தேர்வு
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ’’கடந்த காலங்களில் (2018 - 12,000, 2019 - 10,000 காலிப்பணியிடங்கள்) குரூப் 4 தேர்வுக்கு ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 10,000 என்ற அளவில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக எந்த தேர்வும் திட்டமிட்டபடி நடத்த முடியாததால் போட்டி தேர்வாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதேபோல கொரோனா தொற்று காலத்தில் தனியார் துறையில் பணியாற்றி வேலை இழந்தவர்கள், புதிதாக கல்லூரி படித்து முடித்தவர்கள் போன்றோர், அதிகமாக போட்டி தேர்வுக்கு படித்ததால் போட்டித் தேர்வாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.
3 ஆண்டு கழித்து 2022 தேர்வு வந்ததால் குறைந்தது 20,000 காலிப்பணியிடங்கள் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் தேர்வாணையம் 10,117 பணியிடங்களை மட்டுமே அறிவித்தது.
அரசுப்பணிக் கனவு கனவாகவே போய்விடுமா?
ஆண்டுக்கு 10,000 என்று குறைந்தது 30,000 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டிய அரசு அதில் மூன்றில் ஒரு பங்கு காலிப்பணியிடங்களை அறிவித்திருப்பது எங்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் 4 ஆண்டுகளாக படிக்கும் மாணவர்கள், திருமணம் ஆன பெண்கள், கைக்குழந்தையோடு படிக்கும் பெண்கள், பயிற்சி நிறுவனம் சென்று படிக்க இயலாத கிராமப்புற ஏழை மாணவர்கள் மற்றும் அரசு வேலையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் 30 வயதிற்கும் மேல் ஆகியும் திருமணம் ஆகாத ஆண், பெண் தேர்வர்களின் அரசுப்பணிக் கனவு கனவாகவே போய்விடும் நிலையில் உள்ளது.
இதனால் தேர்வுக்காக அறிவிக்கப்பட்ட 10,117 காலிப் பணியிடங்களுடன் மேலும் குறைந்தபட்சம் 5000 காலிப்பணியிடங்களை சேர்த்து (10177 + 5000) 15000கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை வெளியிட்டு அதற்கான கலந்தாய்வை இந்த ஆண்டே நடத்த வேண்டும்’’ என்று போட்டி தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.