Group 4 Result 2025: இந்த மாதத்திலேயே வெளியாகும் குரூப் 4 தேர்வு முடிவுகள்; எப்போது? காண்பது எப்படி?
TNPSC Group 4 Result 2025: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட 25 வகையான பதவிகள் நிரப்பப்பட உள்ளன.

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்.4-வது வாரத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். இந்தத் தேர்வு முடிவுகளை தேர்வர்கள் ஆன்லைனில் காண்பது எப்படி என்று பார்க்கலாம்.
என்னென்ன பதவிகளுக்கு இந்தத் தேர்வு?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட 25 வகையான பதவிகள் நிரப்பப்பட உள்ளன.
இந்தத் தேர்வுக்கு மொத்தம் 13,89,738 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதில் சுமார் 11.50 லட்சம் தேர்வர்கள் தேர்வை எழுதினர். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வுக் கூடங்களில் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகையில் தேர்வு நடைபெற்றது. ஜூலை 12ஆம் தேதி இந்தத் தேர்வு நடைபெற்றது.
கடினமாக இருந்த தேர்வு
இதில் தமிழ் பாடத்துக்கு 100 மதிப்பெண்கள், பொது அறிவு மற்றும் மனத்திறன் சோதனைக்கு 100 மதிப்பெண்கள் என 200 மதிப்பெண்களுக்கு தேர்வு ஒரே கட்டமாக நடந்தது. இதில் பொதுத்தமிழ் கேள்விகள் கடினமாக இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
தேர்வு முடிவுகள் எப்போது?
தேர்வு முடிவுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் கூறும்போது, ’’3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. மதிப்பீட்டு ஆய்வகம் மூலம், கணினியைக் கொண்டு குரூப் 4 வினாத்தாள்கள் திருத்தப்பட உள்ளன. நம்மிடம் 6 மதிப்பீட்டு ஆய்வகங்கள் உள்ளன’’ என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், அக்டோபர் 4ஆம் வாரத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பிரபாகர் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?
- குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானதும் https://www.tnpsc.gov.in/ என்ற இணைய முகவரியை க்ளிக் செய்யவும்.
- அதில் குரூப் 4 தேர்வு முடிவுகள் என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
- அதில் தேர்வரின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்யவும்.
- தேர்வரின் தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும். அதை வருங்காலப் பயன்பாட்டுக்காக சேமித்து வைத்துக்கொள்ளவும்.
காலியிடங்களின் நிலை என்ன?
குரூப் 4 தேர்வு மூலம் 3,935 காலிப் பணியிடங்களை நிரப்ப, 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் 727 காலியிடங்கள் சேர்க்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது மொத்தம் 4,662 காலிப்பணியிடங்கள் உள்ளன.
இருப்பினும், தேர்வு முடிவுகள் வெளிவரும் வரை காலியிடங்களின் எண்ணிக்கை, பல்வேறு துறைகளிடம் கோரப்படும் என்பதால், காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதல் தகவலுக்கு: https://www.tnpsc.gov.in/























