TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களுக்கு இறுதி வாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
குரூப் 4 தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்களின் விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை நாளை (ஜூன் 5) முதல் ஜூன் 7ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் என்று டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்களின் விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை நாளை (ஜூன் 5) முதல் ஜூன் 7ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் என்று டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இளைஞர்கள் ஆர்வம்
கால் காசாக இருந்தாலும் கவர்ன்மெண்ட் காசாக இருக்க வேண்டும் என்பது மிகவும் பழமையான மொழியாக இருந்தாலும், இன்றளவும் பல இளைஞர்களின் கனவாக உள்ளது. அதனை நிறைவேற்றவே ஒவ்வொரு முறை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்று, தேர்ச்சி பெற்று அரசு வேலையை வாங்குவதற்கு இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சில நூறு காலிப் பணியிடங்களுக்காக நடைபெறும் தேர்வில், லட்சக்கணக்கானோர் பங்கேற்பதை பார்த்தே, அரசு வேலைக்கு இளைஞர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் என்ன என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும். பொதுவாக தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப, குரூப் 1 முதல் குரூப் 8 வரையிலான தேர்வுகளும், இதர துறை சார்ந்த தேர்வுகளையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தி வருகிறது.
தேர்வர்கள் மத்தியில் வரவேற்பு
தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு ஆண்டுதோறும் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. ஒரே தேர்வாக நடத்தப்பட்டு, நேர்காணல் எதுவும் இல்லாமல் தேர்வாகும் அரசுப் பணி என்பதால், இந்தத் தேர்வுக்கு தேர்வர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம்.
இதற்கிடையே குரூப் 4 தேர்வுகளுக்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்வு, கடந்த ஜூலை 24ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது. சரியாக 8 மாதங்கள் ஆன பிறகு மார்ச் 24ஆம் தேதி முடிவுகள் வெளியாகின.
இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் குரூப் 4 தேர்வு எழுதிய தேர்வர்கள் தங்களின் விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை நாளை (ஜூன் 5) முதல் ஜூன் 7ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் என்று டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப் 4 தேர்வில் அடங்கிய பதவிகளுக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு விண்ணப்பதாரர்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதில், சரிபார்ப்புக்கு பின்னர் சில விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களை சரியாக பதிவேற்றம் செய்யாமலும் முழுமையாக பதிவேற்றம் செய்யாமலும் குறைபாடாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் விதமாக 05.06.2023 முதல் 07.06.2023 மாலை 05.45 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்தத் தகவல் அந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, அவ்விண்ணப்பதாரர்கள் அனைவரும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு தவறும் பட்சத்தில், அத்தகைய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது'' என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.