TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு அறிவிப்பு; எழும் கேள்விகள் என்னென்ன? தேர்வர்கள் அதிருப்தி..
10ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும், குரூப் - 4 தேர்வை எழுதலாம்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு அறிவிப்பு இன்று வெளியாகியுள்ள நிலையில், காலிப் பணியிடங்கள், வயது வரம்பு உள்ளிட்டவற்றில் கேள்வி எழுந்துள்ளதாக, தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஜூன் மாதம் 6ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதன் மூலம் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு எழுத விரும்புவோர் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் 28.02.2024, இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பங்களை சரிபார்க்க 04.03.2024 அதிகாலை 12.01 மணியில் இருந்து 06.03.2024, இரவு 11.59 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
TNPSC குரூப் 4 பதவிகள் என்ன?
TNPSC குரூப் 4 தேர்வு மூலம், கிராம நிர்வாக அலுவலர் (VAO), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், ஜூனியர் அசிஸ்டண்ட், பில் கலெக்டர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் கூடுதலாக வன காப்பாளர், வன கண்காணிப்பாளர் ஆகிய பணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
குறைவான காலி இடங்கள்
இந்த நிலையில், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதாக தேர்வர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். 10 ஆயிரத்துக்கும் மேல் காலி இடங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், 6,244 பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன.
நீண்ட அறிவிக்கை
குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை மிகவும் நீண்டதாகவும் குழப்பமானதாகவும் உள்ளதாகத் தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். குரூப் 4 பணிகளுக்கான தேர்வு என்பது டிஎன்பிஎஸ்சியைப் பொறுத்தவரை மிகவும் அடிப்படை நிலையிலான தேர்வு. 10ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும், இந்தத் தேர்வை எழுதலாம். இந்த நிலையில் தேர்வுக்கான அறிவிக்கை, ஆங்கிலத்தில் 74 பக்கங்களுடனும் தமிழில் 84 பக்கங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிதாக சேர்க்கப்பட்ட பணியிடங்கள்
வனக் காவலர் உள்ளிட்ட பணிகளுக்கான வனத் துறை சார்ந்த காலிப் பணியிடங்கள், குரூப் 4 தேர்வில் சேர்க்கப்பட்டது ஏன் என்றும் தேர்வர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த முறை புதிதாக இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டது ஏன் என்றும் அவர்கள் கேட்டுள்ளனர்.
வயது வரம்பில் குழப்பம்
குரூப் 4 தேர்வுக்கு பொதுவாக 18 முதல் 37 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், சில பதவிகளுக்கு வயது வரம்பு மாறுபடும். அதன்படி, கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு 21 முதல் 32 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 10ஆம் வகுப்புத் தேர்ச்சி என்ற தகுதியோடு, உயர் கல்வித் தகுதி இருக்கும் தேர்வர்களுக்கான வயது வரம்பு குறித்துத் தெளிவாகக் குறிப்பிடவில்லை. இது தேர்வர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கையை முழுமையாகக் காண: https://www.tnpsc.gov.in/Document/tamil/1_2024-Tam.pdf