Group 4 Cut Off 2024: டிஎன்பிஎஸ்சி குரூப் 4: அரசு வேலை வேண்டுமா? எந்த பிரிவுக்கு எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் தேவை? விவரம்
TNPSC Group 4 Cut off 2024: குரூப் 4 தேர்வுக்கான ஆன்சர் கீ விரைவில் வெளியாக உள்ளது. இதற்கிடையே அரசு வேலையை உறுதிசெய்ய கட்- ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு தேவை என்பது குறித்துப் பார்க்கலாம்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வி.ஏ.ஓ. எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பதவி மட்டுமின்றி இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. தற்போது வன காப்பாளர், வன கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கும் குரூப் 4 தேர்வு மூலமே ஆட்சேர்க்கை நடைபெறுகிறது.
2024ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வுக்கு மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கிடையே ஜூன் 9ஆம் தேதி மாநிலம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதினர். சென்னையில் 432 மையங்களில் தேர்வு நடந்த நிலையில், 1.33 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதினர்.
வினாத்தாள் எப்படி?
’’பொதுத் தமிழ் எளிதாக இருந்தது. பெரும்பாலான கேள்விகள் நேரடியாகவே கேட்கப்பட்டிருந்தன. இலக்கணப் பகுதியும் அத்தனை கடினமாக இல்லை. அதேநேரம் ஜிஎஸ் தாளும் தற்போதைய நிகழ்வுகளும் கடினமாக இருந்தன’’ என்று தேர்வை எழுதியவர்கள் தெரிவித்தனர்.
சரி, தவறு வகைமை கேள்விகளைத் தாண்டி கான்செப்ட் தொடர்பான கேள்விகள் நிறைய கேட்கப்பட்டிருந்தன என்றும் ஜிஎஸ் பகுதி கடினமாக இருந்ததால் கட்- ஆஃப் சற்றே குறையலாம் எனவும் தேர்வர்கள் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் குரூப் 4 தேர்வுக்கான ஆன்சர் கீ விரைவில் வெளியாக உள்ளது. இதற்கிடையே அரசு வேலையை உறுதிசெய்யகட்- ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு தேவை என்பது குறித்துப் பார்க்கலாம். எனினும் அரசின் அதிகாரப்பூர்வ விடைக் குறிப்பு இன்னும் வெளியாகாததால், தோராய மதிப்பெண்களில் சிறிய அளவில் மாறுபாடுகள் இருக்கலாம்.
இதுகுறித்து டாக்டர் அம்பேத்கர் பயிற்சி மையத்தைச் சேர்ந்த செளந்தர், ABP நாடுவிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
’’குரூப் 4 வேலை கிடைக்க, பொதுப் பிரிவினர் 175 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்திருக்க வேண்டும். இதில் 5 மதிப்பெண்கள் அதிகரிக்கவோ குறையவோ செய்யலாம்.
பி.சி., எம்.பி.சி. பிரிவுக்கு எப்படி?
பி.சி., எம்.பி.சி. பிரிவு மாணவர்கள் 170 மதிப்பெண்களுக்கு மேல் பெற வேண்டியது அவசியம். பி.சி.க்கும் எம்.பி.சி.க்கும் ஓரிரு மதிப்பெண்களே வித்தியாசம் இருக்கும். அதே நேரத்தில் பி.சி. பெண்கள், ஆதரவற்ற விதவைகள், உள் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் இன்னும் கொஞ்சம் குறையும். பொதுவாக பி.சி. பிரிவினரைவிட, பி.சி. முஸ்லிம்களுக்கு 5 மதிப்பெண்கள் வரை குறையலாம்.
எஸ்சி பிரிவுக்கு?
எஸ்சி பிரிவு மாணவர்கள் 165 மதிப்பெண்களுக்கு மேல் பெற வேண்டியது முக்கியம். பழங்குடியினரான எஸ்டி பிரிவு மாணவர்கள், 160 மதிப்பெண்களுக்கு மேல் பெற வேண்டும். பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் 160 பணியிடங்கள் அடங்கிய, வனத்துறை பதவிகளுக்கு 155 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தாலே போதும். ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பதவிக்கு(12ஆம் வகுப்புத் தேர்ச்சி) கொஞ்சம் கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறையும். அதேபோல தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு 20 சதவீத முன்னுரிமை வழங்கப்படும்’’.
இவ்வாறு டாக்டர் அம்பேத்கர் பயிற்சி மையத்தைச் சேர்ந்த செளந்தர் தெரிவித்தார்.