TNPSC Group 2 Exam: இன்று குரூப் 2 தேர்வு; என்னென்ன விதிமுறைகள், கட்டுப்பாடுகள்?- முழு விவரம்
குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு திட்டமிட்டபடி இன்று (மே 21ஆம் தேதி) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.
குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு திட்டமிட்டபடி இன்று (மே 21ஆம் தேதி) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இதில் தேர்வர்கள் என்னென்ன செய்ய வேண்டும்? பார்க்கலாம்.
இதற்காகத் தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் 117 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பொது ஆங்கிலம் பகுதியில் தேர்வெழுத 2 லட்சத்துக்கு 31 ஆயிரத்து 586 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். பொதுத் தமிழ் பகுதியில் தேர்வெழுத 9 லட்சத்துக்கு 46 ஆயிரத்து 589 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் இருந்து 5,500 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதன்மைத் தேர்வுக்கு அனுப்பப்படுவர்.
மொத்தம் 116 நேர்காணல் கொண்ட பதவிகளுக்கும், நேர்காணல் இல்லாத 5,413 பதவிகளுக்கும் தேர்வு நடைபெற உள்ளது. நேர்காணல் கொண்ட பதவிகளுக்கு அதிகபட்சமாக ரூ.1.35 லட்சம் வரை ஊதியம் அளிக்கப்பட உள்ளது.
தேர்வர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்?
* தேர்வர்கள் 8.30 மணிக்கு வர வேண்டும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
* 8.59 மணி வரை மட்டுமே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
* தேர்வர்கள் 12.45 மணி வரை தேர்வறைக்குள் இருக்க வேண்டும்.
* முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே தேர்வு மையங்களுக்குள் அனுமதி அளிக்கப்படுகிறது.
* தேர்வறையில் எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
* அதிகாரிகள் சரி பார்க்கும்போது மட்டும் முகக்கவசத்தை அகற்றி, முகத்தைக் காட்ட வேண்டும்.
* செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை.
* கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
* சமூக இடைவெளி, சுய பாதுகாப்பு, சுத்தம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.
* தெளிவாகத் தெரியும் பாட்டிலில் சொந்தமாக சானிட்டைசரைத் தேர்வர்கள் எடுத்துக்கொண்டு வர வேண்டும்.
* தேர்வுக்குப் பயன்படுத்தும் சொந்த எழுது பொருட்களை, மற்ற தேர்வர்களுடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.
* முறைகேடுகளில் ஈடுபடும் தேர்வர்கள் மீண்டும் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும். தேவைப்பட்டால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்வு முறைகேடுகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை
* அப்ஜெக்டிவ் முறையில் தேர்வுகள் நடத்தப்படும்.
* டிஜிட்டல் முறையில் விடைத்தாள் ஸ்கேன் செய்யப்படும். விடைத்தாள் கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும்.
* ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வர்களின் விவரங்கள், இனி தேர்வு முடிந்தபின் தனியாகப் பிரிக்கப்படும்.