நாளை தொடங்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வு; 90 இடங்களுக்கு இத்தனை பேர் போட்டியா?
19 தேர்வு கண்காணிப்பாளர்கள் தேர்வு மையத்தில் பாதுகாப்பை உறுதி செய்வர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வு நாளை (டிச.10) தொடங்கும் நிலையில், 90 இடங்களுக்கு 1888 பேர் போட்டி இடுகின்றனர். குரூப் 1 தேர்வை 1232 ஆண் தேர்வர்களும் 655 பெண் தேர்வர்களும் 1 மூன்றாம் பாலினத்தவரும் தேர்வை எழுதுகின்றனர்.
தேர்வை எழுத 1988 தேர்வர்கள் தேர்வாகி இருந்த நிலையில், 1888 பேர் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு டிசம்பர் 13ஆம் தேதி வரை 19 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. 19 தேர்வு கண்காணிப்பாளர்கள் தேர்வு மையத்தில் பாதுகாப்பை உறுதி செய்வர்.
என்னென்ன தேர்வு?
முதல் தாள் தமிழ் தகுதித் தேர்வு ஆக நடைபெறுகிறது. இரண்டு, மூன்று, நான்காம் தாள் General Studies தேர்வாகவும் நடைபெற உள்ளது.
டிஎன்பிஎஸ்சி நடத்தப்படும் தேர்வுகளிலேயே மதிப்பு மிக்கதும் அதிக ஊதியம் அளிக்கக்கூடியதுமான குரூப் 1 தேர்வை, யுபிஎஸ்சி தேர்வர்களும் எழுதுவர். துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப குரூப் 1 தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய முறைகளில் குரூப் 1 தேர்வு நடைபெறுகிறது.
2024ஆம் ஆண்டுக்கான குரூப் 1 தேர்வு பற்றிய அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர் (வணிக வரித் துறை), துணைப் பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்), ஊரக மேம்பாட்டு உதவி இயக்குநர் உள்ளிட்ட 90 பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெற்றது.
1.60 லட்சம் பேரில் 1888 பேர் தேர்வு
இந்தத் தேர்வுக்கு 2.38 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், இவர்களுக்கு 38 மாவட்டங்களிலும் 797 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. சென்னையில் 124 மையங்களில் 38,891 பேர் குரூப் 1 தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில், தமிழ்நாடு முழுவதும் 1.60 லட்சம் பேர் தேர்வை எழுதி இருந்தனர். அவர்களில் 1888 பேர் தேர்வுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவருக்கும் நாளை (டிச.10) தேர்வு தொடங்க உள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/