TNPSC CTSE: தயாரா தேர்வர்களே; அடுத்த தேர்வு தேதியை அறிவித்த டிஎன்பிஎஸ்சி- இதோ விவரம்!
நேர்முகத் தேர்வு கொண்ட இத்தேர்வின் மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் அலகு தலைவர், உதவி பொது மேலாளர், மேலாளர் நிலையிலான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் நேர்முகத் தேர்வு பதவிகளுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தேர்வு பாடங்களுக்கான இரண்டாம் தாள் தேர்வுகள் நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.
மேலாண்மை ரீதியிலான பணிகள்
முன்னதாக நேர்காணல் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான 105 பணியிடங்களுக்கு விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 30ஆம் தேதி அன்று தொடங்கியது. தேர்வர்கள் இதற்கு செப்டம்பர் 29ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். அதேபோல அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொண்டனர்.
இந்தத் தேர்வு, மேலாளர், துணை மேலாளர் உள்ளிட்ட மேலாண்மை ரீதியிலான பணியிடங்களை நிரப்ப நடத்தப்படுகிறது. இதற்கு அடிப்படைத் தகுதியாக இளநிலை பொறியியல் படிப்பு அல்லது எம்பிஏ படிப்பு மற்றும் பணி அனுபவம் கோரப்பட்டுள்ளது.
என்னென்ன பணியிடங்கள்?
நேர்முகத் தேர்வு கொண்ட இத்தேர்வின் மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் அலகு தலைவர், உதவி பொது மேலாளர், மேலாளர் (இயந்திரவியல், மின்னியல், ரசாயனம்), பல்வேறு துறைகளுக்கான துணை மேலாளர் பதவிகள் நிரப்பப்பட உள்ளன.
அதேபோல, கல்லூரி நூலகர், கணக்கு அலுவலர், முதுநிலை அலுவலர், தானியங்கி பொறியாளர், கால்நடை உதவி மருத்துவர், உதவி இயக்குநர் மற்றும் உதவி மேலாளர் (இயந்திரவியல், தொழில்நுட்பம், திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள்) ஆகிய பதவிகளில் மொத்தமாக 105 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தேர்வு எப்போது?
தேர்வு பாடங்களுக்கான இரண்டாம் தாள் தேர்வுகள் நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. சென்னை, சேலம், கோவை, தூத்துக்குடி, ஈரோடு, திருச்சி, காஞ்சிபுரம், திருநெல்வேலி, நாகர்கோவில், திருப்பூர், கரூர், வேலூர், மதுரை, விருதுநகர், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
ஊதியம்
ஒவ்வொரு விதமான பணிகளுக்கும் வெவ்வேறு வித ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி நிலை 22 முதல் நிலை 28 வரையிலான ஊதியம் வழங்கப்பட உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
நேர்காணல் கொண்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை தேர்வுக்கான முழு அறிவிக்கையைக் காண https://www.tnpsc.gov.in/Document/english/CTSE%20INTERVIEW%20POSTS-ENGLISH_.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டியது முக்கியம்.