TNPSC: சொன்ன தேதிக்கு முன்பாகவே போட்டித் தேர்வுகள்; சொல்லி அடிக்கும் டிஎன்பிஎஸ்சி!
டிஎன்பிஎஸ்சிகுரூப் 2, 2ஏ தேர்வுகள் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 14 நாட்கள் முன்னதாக 14ஆம் தேதியே நடைபெற்றது.
போட்டித் தேர்வுகள் அறிவிப்பு தொடங்கி, அறிவிக்கை வெளியீடு, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல், கலந்தாய்வு, சான்றிதழ் சரிபார்ப்பு என பணி ஒதுக்கீடு வரையான பணிகளுக்கு எடுத்துக்கொள்ளும் கால அளவு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்து வருகிறது. கடந்த சில நாட்களாக இதுதொடர்பான விவரங்களை தேதி வாரியாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு வருகிறது.
அதேபோல பாடத்திட்ட பகுதி மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போதைய தகவல்கள் தொகுக்கப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்வு அறிவிப்புக்கும் நடந்ததற்குமான இடைவெளி
இந்த நிலையில், அக்டோபர் மாதத்தில் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டதற்கும் தேர்வு நடந்ததற்குமான இடைவெளி குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து இன்று டிஎன்பிஎஸ்சி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில், குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெறும் என்று குறிப்பிட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட தேதியில் தேர்வு நடைபெற்றது.
அதேபோல, குரூப் 1 பி, 1 சி ஆகிய தேர்வுகள் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த தேதியான ஜூலை12ஆம் தேதி அன்று நடைபெற்றன. போலவே குரூப் 1 தேர்வு சொன்ன தேதியில் ஜூலை 13ஆம் தேதி நடைபெற்றது. ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான தேர்வு, சொன்னபடியே அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்றது.
இதையும் வாசிக்கலாம்: TNPSC Reforms: பட்டையைக் கிளப்பும் டிஎன்பிஎஸ்சி: படுவேகமாக முடிவுகளை வெளியிட்டு அசத்தல்!
சொன்ன தேதிக்கு முன்னதாகவே தேர்வுகள்
ஆச்சரியப்படுத்தும் விதமாக குரூப் 2, 2ஏ தேர்வுகள் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 14 நாட்கள் முன்னதாக 14ஆம் தேதியே நடைபெற்றது.
எனினும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகளுக்கான நேர்காணல் கொண்ட பதவிகளுக்கான தேர்வு மட்டும் ஒரு நாள் தாமதமாக ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெற்றது.
குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது?
இதற்கிடையே ஜூன் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தகவல் அளித்துள்ளது. தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் இந்தத் தகவலை உறுதிப்படுத்தி உள்ளார்.
பொதுவாக டிஎன்பிஎஸ்சி மந்த கதியில் செயல்படுவதாகத் தேர்வர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில், சொன்ன தேதிக்கு முன்பாகவே தேர்வை நடத்திக்காட்டி உள்ளது டிஎன்பிஎஸ்சி.
இதையும் வாசிக்கலாம்: சபாஷ்: போட்டித் தேர்வுகள், வெற்றிபெற்றோரின் விவரங்களை வெளிப்படையாக வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- விவரம்!