TNEA Counselling: 55 ஆயிரம் இடங்களுக்கு தொடங்கிய பொறியியல் துணைக் கலந்தாய்வு; நாளை நிறைவு
TNEA Suppelementary Counselling 2024: 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்களைக் கொண்டு நிரப்பப்படுவது வழக்கம்.
மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள சுமார் 55 ஆயிரம் இடங்களுக்கு பொறியியல் துணைக் கலந்தாய்வு தொடங்க நடைபெற்று வருகிறது.
மாநிலம் முழுவதும் 2024- 25ஆம் ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடந்து முடிந்தது. இதில் மொத்தமுள்ள 1,62,392 இடங்களில் 1,07,805 இடங்கள் நிரம்பின. மொத்தத்தில் 66.39 சதவீத இடங்கள் நிரம்பின.
துணைக் கலந்தாய்வு
மீதமுள்ள காலியிடங்கள், 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்களைக் கொண்டு நிரப்பப்படுவது வழக்கம். இதற்காக, துணைக் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை மையம் கூறி உள்ளதாவது:
‘’துணைக் கலந்தாய்வுக்கு ஆன்லைன் மூலம் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் செப்.4-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பித்தனர். அகாடமிக் என்னும் கல்வி பிரிவில் 12 ஆயிரத்து 39 பேரும், தொழிற்கல்வி பிரிவில் 274 பேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கல்வி பிரிவின் கீழ் 4,432 பேரும், தொழிற்கல்வி பிரிவில் 69 பேரும் விண்ணப்பித்தனர்.
அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு கல்வி பிரிவில் 11,511 பேரும் தொழிற்கல்வி பிரிவில் 258 பேரும், 7.5சதவீத ஒதுக்கீட்டில் கல்வி பிரிவில் 3,736 பேரும், தொழிற்கல்வி பிரிவில் 47 பேரும் தகுதி பெற்றனர். பொதுப் பிரிவில் 54,586 இடங்களும் தொழிற் பிரிவில் 2,342 இடங்களும் உள்ளன.
நாளை நிறைவு
இந்த நிலையில், அவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு இணையவழி கலந்தாய்வும் தொடங்கியது. மாணவர்கள் கல்லூரியை தேர்வு செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டு தற்காலிக ஒதுக்கீட்டை உறுதி செய்தவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். துணை கலந்தாய்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது.
எஸ்சிஏ - எஸ்சி கலந்தாய்வு
இதைத் தொடர்ந்து எஸ்சி - அருந்ததியர் பிரிவில் காலியாக உள்ள இடங்களை எஸ்சி மாணவர்களை கொண்டு நிரப்புவதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 10 மற்றும் 11ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.tneaonline.org/
இதையும் வாசிக்கலாம்: TNEA Counselling: முடிந்த பொறியியல் கலந்தாய்வு; 66% இடங்கள் நிரம்பின- 33 கல்லூரிகளில் ஓரிலக்க சேர்க்கை!