TNEA Counselling: 2 கட்ட பொறியியல் கலந்தாய்வு நிறைவு; 31% நிரம்பிய இடங்கள், ஓரிடம்கூடப் பெறாத 30 கல்லூரிகள்- அதிர்ச்சி புள்ளிவிவரம் இதோ!
Engineering Counselling 2024: 30 கல்லூரிகளால் ஒரு இடத்தைக் கூட நிரப்ப முடியவில்லை. 197 கல்லூரிகளில் 10 சதவீத இடத்தைக் கூட நிரப்ப முடியவில்லை.
2024ஆம் கல்வி ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 2ஆவது கட்டக் கலந்தாய்வின் முடிவில், 37.61 சதவீத இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. அதேபோல 30 கல்லூரிகளால் ஒரு இடத்தைக் கூட நிரப்ப முடியவில்லை. 197 கல்லூரிகளில் 10 சதவீத இடத்தைக் கூட நிரப்ப முடியவில்லை.
இதுகுறித்து மூத்த கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி விரிவான தகவல்களைப் பகிர்ந்து உள்ளார்.
இரண்டாம் கட்டப் பொறியியல் கலந்தாய்வில் 78 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட நிலையில், 43,303 மாணவர்கள் இட ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளனர். இதில் 475 மாணவர்கள் முதல் கட்டக் கலந்தாய்வில் இருந்து கலந்துகொண்டு ஒதுக்கீட்டு ஆணைகளைப் பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமாகும்.
37.61 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பின
முதல் கட்டக் கலந்தாய்வில் 17,679 பேர் பொறியியல் கல்லூரிகளைத் தேர்வு செய்த நிலையில், இதுவரை 61,082 பேர் ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக 1,62,392 இடங்கள் பொறியியல் கல்லூரிகளில் உள்ள நிலையில், இதில், 37.61 சதவீத இடங்கள் மட்டுமே இதுவரை நிரப்பப்பட்டுள்ளன.
தொடர்ந்து 3ஆவது கட்டக் கலந்தாய்வில் மீதமுள்ள 1,01,310 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த இடங்களுக்கு 93 ஆயிரம் மாணவர்கள் போட்டியிட உள்ளதால், கலந்தாய்வில் பங்கேற்கும் அனைவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் தாங்கள் எதிர்பார்க்கும் கல்லூரி, கோர்ஸ் கிடைக்குமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.
எனினும் கலந்தாய்வின் முடிவில் 55 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன படிப்புகளுக்கு மவுசு?
கலந்தாய்வில் மாணவர்கள், கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு படிப்புகளை அதிக அளவில் தேர்வு செய்துள்ளனர். அதற்கு அடுத்த இடங்களில் இசிஇ, ஐ.டி. படிப்புகள் அதிக அளவில் எடுக்கப்பட்டுள்ளன. சிவில், மெக்கானிக்கல் படிப்புகளின் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. அதேபோல, புரொடக்ஷன், ஆட்டோமொபைல், ஏரோநாட்டிக்கல் படிப்புகளையும் மாணவர்கள் அதிகளவில் விரும்பவில்லை.
ஓரிடம் கூட நிரம்பாத 30 கல்லூரிகள்
இரண்டாம் கட்டக் கலந்தாய்வின் முடிவில், 21 தனியார் கல்லூரிகள் உள்ளிட்ட 39 கல்லூரிகள் 90 சதவீத பொறியியல் இடங்களை நிரப்பி உள்ளன.
அதேபோல 57 பொறியியல் கல்லூரிகள் 80%-க்கும் அதிகமான இடங்களை நிரப்பியுள்ளன. 114 கல்லூரிகள் 50%-க்கும் அதிகமான இடங்களை நிரப்பியுள்ளன. இதில், 4 கல்லூரிகள் 100% இடங்களை நிரப்பியுள்ளன.
எந்தெந்தக் கல்லூரிகள்?
- மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (Central Electro Chemical Research Institute )
- MIT வளாகம் (அண்ணா பல்கலைக்கழகம்)
- CEG வளாகம் (அண்ணா பல்கலைக்கழகம்)
- கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளி (School of Architecture and Planning (for B. Plan)
அதே நேரத்தில், மொத்தமுள்ள 443 கல்லூரிகளில், 30 கல்லூரிகளால் ஒரு இடத்தைக் கூட நிரப்ப முடியவில்லை. 197 கல்லூரிகளில் 10 சதவீத இடத்தைக் கூட நிரப்ப முடியவில்லை. 110 பொறியியல் கல்லூரிகள் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே இடங்களை நிரப்பி உள்ளன.
மாணவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
இந்த புள்ளிவிவரங்கள் குறித்துக் கவலை தெரிவித்த கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி, ’’இத்தகைய கல்லூரிகளால் தரமான கல்வியை எப்படி அளிக்க முடியும்? இங்கு படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கேள்வி எழுகிறது.
அதேபோல தமிழ்வழிப் பொறியியல் கல்வியை விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. அரசு பொறியியல் கல்லூரிகளைப் பொறுத்தவரை, கிராமப் புறங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை.
ஒருவர் கூட சேராத படிப்புகள்
பெட்ரோ கெமிக்கல் பொறியியல், தொழில்துறை பொறியியல் மற்றும் மேலாண்மை டெக்ஸ்டைல் வேதியியல் ஆகிய பொறியியல் பிரிவுகளில் ஒருவர் கூட சேரவில்லை’’ என்று கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் தெரிவித்தார்.
மாறும் பொறியியல் கல்லூரிகளின் போக்கை உரிய வகையில் மதிப்பீடு செய்து, கல்லூரி மற்றும் படிப்புகளின் தரத்தை உறுதிசெய்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாணவர்கள், பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.