அடடே... பிப்.28 முதல் எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை- என்ன வேலையெல்லாம் கிடையாது?
ஆசிரியர்களுக்கான எமிஸ் தரவு உள்ளீட்டில் (டேட்டா என்ட்ரி) பின்வரும் தொகுதிகள் நீக்கப்படுகின்றன / குறைக்கப்படுகின்றன.

பிப்ரவரி 28ஆம் தேதி முதல் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் EMIS எனப்படும் எமிஸ் பணிகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என சமக்ர சிக்ஷா மாநிலத் திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.
எமிஸ் என்பது கல்வி மேலாண்மை தகவல் மையம் (Educational Management Information System) ஆகும். பள்ளி, மாணவர்கள் தொடர்பான தகவல்களையும் புள்ளிவிவரங்களையும் உள்ளடக்கியது எமிஸ். அதேபோல ஆசிரியர்கள் உள்ளிட்ட அலுவலர்களின் தினசரி செயல்பாடுகளும் எமிஸ் தளத்தில் கண்காணிக்கப்படுகின்றன. எமிஸ் வழியாக மாணவர்கள், நலத்திட்டங்கள் குறித்த தகவல்களை உள்ளிட வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. எனினும் இதுதொடர்பான பணிகள் அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
எமிஸ் தரவு உள்ளீட்டுப் பணிகள் நீக்கம்
இதனால் கற்பித்தல் பணிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் மட்டுமே ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில், ஆசிரியர்களுக்கான எமிஸ் தரவு உள்ளீட்டில் (டேட்டா என்ட்ரி) பின்வரும் தொகுதிகள் நீக்கப்படுகின்றன / குறைக்கப்படுகின்றன.
பிப்.28 வரையே
தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணிச் சுமையைக் குறைக்கும் நோக்கில் தற்போதைய தரவு உள்ளீட்டு செயல்முறைகளை மதிப்பிடுவதற்கும் தீர்வுகளை முன்மொழிவதற்கும் ஒரு குழு அமைக்கப்பட்டது. குறிப்பாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள EMIS பணிகளிலிருந்து 28.02.2025 க்குள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன திட்டங்கள்?
அதன்படி, ஆசிரியர் தொழில்முறை மேம்பாடு (TPD), அடல் ஆய்வகம், பதிவு தொகுதி (நிதிப் பதிவேடு, நிறுவனப் பதிவேடு, பள்ளி நன்கொடையாளர் பதிவேடு, தொடர்புப் பதிவேடு, மனுக்கள் மற்றும் நடவடிக்கைகள் பதிவேடு, உதவித்தொகைகள் மற்றும் மாணவர் ஊக்கத் தொகைப் பதிவேடு, ஆசிரியர் கால அட்டவணை, மாதாந்திர அறிக்கைகள் மற்றும் பள்ளிகளுக்கான EB மின்சார விவரங்கள்), திட்டங்கள் மற்றும் வாசிப்புத் திட்டத்திற்கான மாணவர்- நிலை தரவு உள்ளீடு (வாசிப்பு இயக்கம்), நூலக தொகுதி, கலைத் திருவிழா, உருவாக்கம் மற்றும் சுருக்க மதிப்பீடுகள் (FA & SA), திட்டங்கள் மற்றும் பாடப்புத்தகங்கள், ஹவுஸ் அமைப்பு மற்றும் மன்றங்கள், IFHRMS மற்றும் பணியாளர் தரவு, சாத்தியமான இடைநிற்றல் கண்காணிப்பு, கால அட்டவணை மேலாண்மை, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, பள்ளி சுயவிவர தொகுதி, ஹைடெக் ஆய்வக மதிப்பீடு மற்றும் சுகாதார பரிசோதனை வினாத்தாள் ஆகிய திட்டங்களின் விவரங்களை ஆசிரியர்களே உள்ளீடு செய்து வந்தனர். இவை குறைக்கப்படும் அல்லது நீக்கப்படும் என்று சமக்ர சிக்ஷா திட்டத்தின் மாநிலத் திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மேலும் பிப்ரவரி 28ஆம் தேதியில் இருந்து இந்த மாற்றங்கள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

