TN Schools: புதிய மாணவர்கள் சேர்க்கையில் இது கட்டாயம்; பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு!
புதிய மாணவர்களின் விவரங்களை எமிஸ் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும்போது ஆதார் எண்ணையும் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

2025- 26ஆம் கல்வி ஆண்டுக்கான அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையின்போது ஆதார் எண்ணையும் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாநிலம் முழுவதும் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1ஆம் தேதி தொடங்கி மும்முரமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாணவர் சேர்க்கை லட்சங்களைத் தாண்டி நடந்து கொண்டிருக்கிறது.
புதிய மாணவர் சேர்க்கை
இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ’’திருப்பத்தூர் மாவட்டம் 2025-26ஆம் கல்வியாண்டில் புதிய மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
புதிய மாணவர்களின் விவரங்களை எமிஸ் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும்போது ஆதார் எண்ணையும் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுகுறித்து அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களையும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு திட்டத்தின்கீழ், புதிய இலக்கை எட்டியதை அடுத்து மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது. இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறூம்போது, ’’தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் திராவிடமாடல் ஆட்சியில் நமது பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களின் வழியாக உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கி வருகிறோம். இந்தத் தொகைகள் அனைத்தும் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய வங்கி கணக்கு தொடங்குவது அவசியமாக இருந்தது. வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்றால் மாணவர்களின் “ஆதார்” எண் அவசியமானது.
பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு
இச்சூழலில்தான் 2024 பிப்ரவரி 23ஆம் தேதி “பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு” எனும் திட்டத்தைத் தொடங்கி வைத்தோம். இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பயிலும் ஒட்டுமொத்த மாணவர் எண்ணிக்கையில் 70 சதவிகித மாணவர்களுக்கு புதிய ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணி துல்லியமாக மேற்கொள்ளப்பட்டு, சிறந்த இலக்கினை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை எட்டியுள்ளது.
ஆதார் பதிவை துல்லியமாக மேற்கொண்டு முதலிடம் பெற்றதற்காக இந்திய ஒன்றிய அரசின் தனித்துவ அடையாள ஆணையமானது நமது பள்ளிக் கல்வித்துறைக்கு “சாதனையாளர் விருது” வழங்கி கெளரவித்துள்ளது’’ என்று பதிவிட்டுள்ளார்.

