Half Yearly Exams: மாணவர்களே… அரையாண்டு தேர்வு தள்ளிவைப்பு: ஏன்? மீண்டும் எப்போது? விடுமுறை எப்படி?
தேர்வு நடத்தப்படாத மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி மாதம் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நடைபெறாத அரையாண்டுத் தேர்வுகள், ஜனவரி மாதம் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அரையாண்டுத் தேர்வில் மாற்றம்
தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் என அனைத்து விதமான பள்ளிகளிலும் அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கெனவே பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.
இதில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 9ஆம் தேதி அரையாண்டுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வந்தது, 23ஆம் தேதி வரையும் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தது. அதேபோல, 1 முதல் 5ஆம் வகுப்புக்கு டிசம்பர் 16ல் தொடங்கி 23ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது.
பரவலாகப் பெய்யும் கனமழை
இதற்கிடையே வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்து வருவதால் புயலும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியும் மாறிமாறி உருவாகி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறையானது அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் விடுமுறை அளிக்கப்பட்ட நாட்களில் நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை.
இவ்வாறு தேர்வு நடத்தப்படாத மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி மாதம் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக ஃபெஞ்சல் புயல் பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. இவர்களுக்கு ஜனவரி 2 முதல் 10ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. இதே அட்டவணையில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் தேர்வு நடைபெற உள்ளது.
அரையாண்டுத் தேர்வு விடுமுறை எப்படி?
அதே நேரத்தில் அரையாண்டு விடுமுறையில் மாற்றம் இருக்காது. திட்டமிட்டபடி தொடர்ந்து 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 24 முதல் புத்தாண்டான ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை வழங்கப்படும். இந்த விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.