TNEA 2024: பொறியியல் விண்ணப்பப் பதிவு, கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை எப்போது?
TNEA 2024 Dates: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, மே முதல் வாரத்தில் தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
பொறியியல், பி.டெக். படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு மே முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியாக உள்ளன. முன்னதாக, 2023- 24ஆம் கல்வி ஆண்டுக்கான 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. மார்ச் 22ஆம் தேதியுடன் முடிந்த தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
இந்த நிலையில், விடைத்தாள்கள் ஏப்ரல் 1 முதல் 12-ஆம் தேதி வரை திருத்தப்பட்டன. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 6 அன்று வெளியாகின்றன. இதை அடுத்து, மே முதல் வாரத்தில், குறிப்பாக பிளஸ் 2 தேர்வு முடிவுக்கு 1 அல்லது 2 நாட்கள் முன்பு பி.இ. மற்றும் பி.டெக். படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர்கள் சேர்க்கையை, அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்த நிலையில், தற்போது டோட் எனப்படும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தி வருகிறது.
தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் ஆலோசனைக் கூட்டம்
இந்த நிலையில் 2024 - 2025ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான தேதிகள் குறித்து முடிவு செய்வதற்கான கூட்டம், தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் ஆணையர் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்தாய்வு நடத்தப்படும் தேதிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
TNEA 2024 Admission Dates: இந்த நிலையில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, மே முதல் வாரத்தில் தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் மே 6-ம் தேதிக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் முன்னதாக விண்ணப்பப் பதிவைத் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாணவர்களுக்கு சுமார் 2 மாதங்கள் வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கக் கால அவகாசம் வழங்கப்பட உள்ளதாகவும் உயர் கல்வித்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
பொறியியல் கலந்தாய்வு எப்போது?
அதிக மதிப்பெண்களைப் பெறும் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்தபிறகு, மருத்துவப் படிப்பில் சேர்ந்தால் அங்கு சென்றுவிடுகின்றனர். அந்த பொறியியல் இடம் காலியாவதைத் தடுக்க, கடந்த சில ஆண்டுகளாக மருத்துவக் கலந்தாய்வு நடத்தப்பட்ட பின்னரே பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இதன்படி ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதலில் கலந்தாய்வு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.