தொடங்கிய 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு; பள்ளிக் கல்வி இயக்குநர் நேரில் ஆய்வு!
பொதுத்தேர்வு எழுதும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று (பிப்ரவரி 7) தொடங்கி உள்ளன.இந்தத் தேர்வுகள் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெற உள்ளன.

2025ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 செய்முறைத் தேர்வு மாநிலம் முழுவதும் இன்று (பிப்.7) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை பள்ளிக் கல்வி இயக்குநர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
தமிழக மாநிலக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை பல்வேறு தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
6 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு
இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று (பிப்ரவரி 7) தொடங்கி உள்ளன. மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேலான மேல்நிலை பள்ளிகளில் பயிலும் சுமார் 6 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்று உள்ளனர். இந்தத் தேர்வுகள் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெற உள்ளன. தொடர்ந்து பிப்.15ஆம் தேதி 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு தொடங்குகிறது.
தேர்வின்போது மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சலுகைகள் வழங்கப்பட வேண்டும். செய்முறை தேர்வுக்கான புறத்தேர்வாளராக பிற பள்ளிகளின் ஆசிரியர்களைத்தான் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
பிப்ரவரி 14-ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வு
இதற்காக அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் செய்முறை தேர்வுக்கு தேவையான ஆய்வகங்களில் உள்ள பொருட்கள் வாங்கி வைக்கப்பட்டுள்ளன. அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். எந்தவித குளறுபடிக்கும் இடம் இல்லாமல், பிப்ரவரி 14-ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். ஒரு முறைக்கு அதிகபட்சம் 25 முதல் 30 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்வில் ஏதேனும் புகார்கள் கிடைக்கப் பெற்றால் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் பொறுப்பேற்க நேரிடும். எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை அரசுத் தேர்வுகள் துறை வழங்கியுள்ளது.
பள்ளிக் கல்வி இயக்குநர் ஆய்வு
இந்த் நிலையில், இன்று காலையில் தொடங்கிய செய்முறைத் தேர்வை பள்ளிக் கல்வி இயக்குநர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன், சேத்துப்பட்டில் உள்ள எம்சிசி மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

