12th Exam: தொடங்கிய பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம்; தேர்வு முடிவுகள் எப்போது?
12th Exam 2024 Paper Correction: 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மார்ச் 22ஆம் தேதியோடு முடிவடைந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 1) முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி உள்ளது.
12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மார்ச் 22ஆம் தேதியோடு முடிவடைந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 1) முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி உள்ளது.
தமிழக மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் ஆண்டுதோறும் 10ஆம் வகுப்பு, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2023- 24ஆம் கல்வி ஆண்டுக்கான 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. மார்ச் 22ஆம் தேதியுடன் முடிந்த தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
தற்போது 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றுடன் (ஏப்ரல் 1) கணிதப் பொதுத் தேர்வு முடிந்துள்ளது. இந்த நிலையில் இதைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்துதல் பணிகள் நேற்று (ஏப்ரல் 1ஆம் தேதி) முதல் தொடங்கின. தொடர்ந்து 13ஆம் தேதி வரை திருத்துதல் பணிகள் நடைபெற உள்ளன.
இதுகுறித்துத் தேர்வுத் துறை அதிகாரிகள் கூறும்போது, பொதுத் தேர்வு மார்ச் 22ஆம் தேதி முடிந்த நிலையில், மார்ச் 23-ம் தேதி முதல் மாணவர்களின் விடைத் தாள்கள் 101 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கே இருந்து திருத்துதல் முகாம்களுக்கு விடைத் தாள்கள் மார்ச் 28-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து விடைத்தாள் திருத்தம் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.
46 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபாடு
2023- 24ஆம் கல்வியாண்டில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை சுமார் 25 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிக்காக தமிழகம் முழுவதும் 83 தேர்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. இவர்களுக்கு ஏப்ரல் 13ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தம் நடைபெற உள்ளது.
ஏப்ரல் 12 முதல் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தம்
11ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையும் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடத்தப்பட உள்ளன. தொடர்ந்து பத்தாம் வகுப்புக்கு ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையும் விடைத்தாள் திருத்தம் செய்யப்பட உள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்ததும் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
தேர்வு முடிவுகள் எப்போது?
தொடர்ந்து 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாக உள்ளன. அதேபோல மே 10ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. அதேபோல 11ஆம் வகுப்புக்கு மே 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.